சீமான் பத்திநாதன் பர்ணாந்து. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
176 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-5881-56-7.
மன்னார், வங்காலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சீமான் பத்திநாதன் பர்ணாந்து, ஈழத்துத் தமிழ் இலக்கிய களத்தில் மூத்த படைப்பாளியாக இயங்கிவருபவர். 1970களில் நாடகத்துறை மூலமாக கலைத்துறையில் அறிமுகமான இவர் கூத்து நடிகராகவும், நாடகத் தயாரிப்பாளராகவும், நெறியாளராகவும் விளங்கியவர். படைப்பிலக்கியத்துறையில் இவரது பிரசன்னம் 2016இல் நிகழ்ந்தது. கூத்துப் படிச்ச கதை, தோற்றுப் போனவர்கள், 1964 டிசம்பர் 22, குஞ்சரம் ஊர்ந்தோர், திசையறியாப் பயணங்கள், கூறியது கூறல் போன்ற நாவல்களையும், பாடம் என்ற கவிதைத் தொகுதியையும் குறிப்பிடலாம். இவரது ‘ஒரு நாள் பாவம்’ நாவலின் மையக் கருவானது கிறிஸ்தவ மதகுருமாரை, அவர்களது வாழ்வியலை அவர்களது பதவிநிலைத் தெரிவுகளை அவர்களுக்கும் சமூகத்துக்குமான உறவுகளை யார் பாவகாரியங்களை செய்தாலும் அது பாவம் தான் என்பதை எடுத்துரைப்பதாக அமைகின்றது. கரையோரக் கிராமங்கள் மதபீடங்களின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டுக் கிடந்த கடற்கரைக் கிராமமொன்றில் 1950களில் நிகழ்ந்த அதிகார மாற்றத்தை அதன் சமூக சமய நிகழ்வுகளுடன் கலந்து இப்புதினம் சொல்லவிழைகின்றது. அக்காலப் பகுதியில் அங்கு நிலவிய சமூக பொருளாதார அசைவியக்கங்கள் அரசியல் ஆட்சியதிகார பின்னணியில் எழுதப்பட்டுள்ள இந்நாவல் இன்னுமொரு உலகிற்கு எம்மை அழைத்துச் செல்கின்றது. தீயவர்களின் கடைசிப் புகலிடம் அரசியலே என்னும் கூற்றை மெய்ப்பிக்கும் முகமாக இதில் சம்பவங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 264ஆவது நூலாக வெளிவந்துள்ளது.