கோ.நடேசையர் (மூலம்), பெருமாள் சரவணகுமார் (பதிப்பாசிரியர்). பேராதனை: பெருமாள் சரவணகுமார், தமிழ்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், 2வது பதிப்பு, 2022, 1வது பதிப்பு, 1915. (கண்டி: மலைவாசம் பதிப்பகம்).
132 பக்கம், விலை: இந்திய ரூபா 120.,அளவு: 21.5×14.5 சமீ.
கோ.நடேசையர் 1915இல் தமிழகத்தில் இரு பாகங்களில் வெளியிட்ட ‘ஒற்றன்’ என்ற நாவல் 107 ஆண்டுகளின் பின்னர் மீள்பதிப்பாகியுள்ளது. தேசபக்தன் கோ.நடேசையரின் இலக்கிய முயற்சிகளின் சான்றாக அமையும் நாவல் இது. தேசாபிமானிகள் எவ்வாறு ஒற்றர்களாகச் செயற்படவேண்டும் என்பதையே இந்நாவல் மையச் சரடாகக் கொண்டிருக்கிறது. இந்த அம்சமே தொடக்க காலத்தில் தமிழில் எழுந்த ஏனைய வெகுசன நாவல்களிலிருந்து ஒற்றன் நாவலை தனித்துவம் உடையதாக்குகின்றது. இந்நாவலின் கதையானது ஆஸ்திரியா நாட்டிலிருந்து தொடங்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜேர்மனி, ரஷ்யா என விரிந்து செல்வதைக் காணலாம். நாவலின் பெரும்பகுதி லண்டனில் நிகழ்வதாகவே காட்டப்படுகின்றது. முதலாவது உலக மகா யுத்தத்தின்போது, ஆஸ்திரிய ஆங்கிலேய, சேர்பிய ஒற்றர்கள் தத்தம் நாட்டின் நன்மைக்காக ஒருவரையொருவர் ஏமாற்றி நன்மையடைந்தார்கள். சேர்பிய நாட்டைக் கைப்பற்றுவதற்காக ஆஸ்திரியாவும் ஜேர்மனியும் மேற்கொண்ட சூழ்ச்சிகளும் அவற்றைக் கண்டுபிடிப்பதற்காக சேர்பியா நாட்டு வேலைக்காரியான ஆன்னி என்னும் பெண்ணும் இங்கிலாந்து தேசத்து ஒற்றன் ஒருவனும் மேற்கொள்ளும் முயற்சிகளும், இறுதியில் இவர்களின் சாமர்த்தியத்தால் ஜேர்மனியர்கள் ஆஸ்திரிய ஒற்றர்களை ஏமாற்றித் தங்கள் நாட்டை எவ்வாறு காப்பாற்றினார்கள் என்பதை விறுவிறுப்பான இனிய தமிழ்நடையில் நடேசையர் எழுதியுள்ளார். தஞ்சாவூரைப் பிறப்பிடமாகக் கொண்ட தேசபக்தன் கோ.நடேசையர் (1887-1947) பிரிட்டிஷ் இந்தியாவில் 33 ஆண்டுகளும், இலங்கையில் 27 ஆண்டுகளும் வாழ்ந்தவர். மேல்நிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர், வணிகவியல் புலமையாளர், பத்திரிகையாளர், தொழிற்சங்கவாதி, அரசாங்க சபை உறுப்பினர், இலக்கியப் படைப்பாளி எனப் பல தளங்களில் இயங்கியவர். இலங்கை-மலையக நிர்மாணச் சிற்பிகளுள் முதன்மையானவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 120203).