இ.சு.முரளிதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-37-5.
அத்திபூத்தாற்போல் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியங்களில் தோற்றம்பெறும் ஒரு துப்பறியும் நாவல் இது. ‘நண்பர் ஒருவரை மனநல சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அன்றைய தினம் மாறுபட்ட அனுபவங்கள் சேகரமாயின. நண்பரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவரது தாயார் வரும்வரைக்கும் காத்திருந்தேன். உறவினரும், பார்வையாளர்களும் உதவியாளர்களுமாகப் பலர் வெளியே அமர்ந்திருந்தனர். ‘நீங்கள் யாரைப் பார்க்க வந்தீர்கள்?’ என அருகிலே இருந்தவரிடம் கேட்டேன். ‘நான் பேஷன்ட்’ என்றார். கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால், முள்ளிவாய்க்காலிலிருந்து மருத்துவமனை என்றவாறு அனைத்து கதையினையும் விவரித்தார். இறுதிப் போரில் பெற்றோரை இழந்து நீண்டகாலம் சுய நினைவற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதைச் சொன்னார். சுயநினைவுக்கு வந்தபோது, ஆயுதப் போராட்டம் துடைத்தழிக்கப்பட்டமை அறிந்து அதிர்ச்சியாக இருந்ததாகவும், வாக்கரசியல் சார்ந்த தமிழர்களின் சுயநல நகர்வுகள் பேரதிர்ச்சியாக அமைந்ததாகவும் குறிப்பிட்டார். தமிழ் அரசியற் சூழல் குறித்து கோபத்தோடும் விசனத்தோடும் பல்வேறு விடயங்களை எடுத்துரைத்தார். அவர் கூறிய கதையினையும், அவர் குறிப்பிட்ட விடயங்களையும் கலந்து உருவாக்கிய புனைவே ‘ஓயாத கொலைகள்’. வழமையான துப்பறியும் கதையிலிருந்து விலகி, எங்களது சூழலுக்கு அமைவாகக் கதையினை நகர்த்தியுள்ளேன்.’ (இ.சு.முரளிதரன், என்னுரையில்). இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 310ஆவது நூலாக வெளிவந்துள்ளது.