தமிழ்க் கவி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
140 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0958-38-2.
‘காடுகள் மகிழ்ச்சி தருபவை. அதனால்தான் விலங்குகளும் பறவைகளும் காட்டுவாசிகளும் நிம்மதியாக வாழ்கின்றன. மனிதர்கள் அதன் உள்ளே நுழைந்து குழப்பாதவரை அவை பெரும் நன்மையை செய்து கொண்டிருக்கும். இயற்கையை மனிதர்கள் தமது போக்கில் மாற்றியதன் விளைவுகளை அவர்கள் அனுபவிக்க தொடங்கியுள்ளார்கள். காடுகளின் உள்ளே மனிதர்களும் கொலைக்கருவிகளும் புகுந்தபோது வன விலங்குகளும் திக்குத் தெரியாமல் அலைய ஆரம்பித்தன. அந்த மனிதர்களுடன் நாங்களும் வன்னிக் காட்டின் யுத்தமுனைகள் சிலவற்றை தரிசிக்க வனத்தில் இறங்கலாமா?’ (தமிழ்க்கவி, என்னுரையில்). இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 308ஆவது நூலாக வெளிவந்துள்ளது. வவுனியாவில் சின்னப்புதுக்குளம் கிராமத்தில் வாழ்ந்த விவசாயக் குடும்பத்தில் மண்ணை நம்பி வாழ்ந்திருந்த கந்தப்பு-லட்சுமி தம்பதியரின் பிள்ளைகள் பன்னிரண்டு பேரில் இரண்டாவது பிள்ளையான தமயந்திதான், பின்னாளில் ஆளுமை மிக்க பெண்ணாக வளர்ந்திருக்கும் தமிழ்க்கவி. ஈழ விடுதலைப் போராட்டத்தின் இரண்டு தசாப்த காலங்களுக்கும் மேலாக அதன் பல்வேறு பகுதிகளிலும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்திருக்கும் இவர், விடுதலைப் புலிகள் அமைப்பினர் உருவாக்கிய சட்டவல்லுநர் குழுவிலும் இணைந்திருந்தவர். அத்துடன் புலிகளின் குரல் வானொலி, தமிழீழ தேசியத் தொலைக்காட்சி முதலானவற்றில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தவர். சிறுகதை, நாவல், பத்தி எழுத்து, நடிப்பு, இசை முதலான கலைத்துறைகளிலும் ஈடுபாடுகொண்டிருந்தவர். இன்றும் உயிர்ப்புடன் தன் எழுத்துப்பணியைத் தொடரும் தமிழ்க்கவியின் இயங்கு தளம் விரிவானது.