சீமான் பத்திநாதன் பர்ணாந்து. மன்னார்: சீமான் பத்திநாதன் பர்ணாந்து, நானாட்டான், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: வரன் பிரிண்டேர்ஸ், 50, கல்லூரி வீதி, நீராவியடி).
vii, 198 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-43624-5-1.
விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்வியலை இலக்கியமாக வடிக்கும் முயற்சியில் விளைந்தது இந்நாவல். முத்துக்குளிப்பு அற்றுப்போன பின்னர் மன்னார்க் கடலோர மாந்தர்களான பரதவர்களின் வாழ்வில் பொருளியல் எவ்வாறு பரிணாம வளர்ச்சி பெற்று வளரந்தது என்பதை இந்நாவல் தெளிவாக வெளிப்படுத்துகின்றது. இச்சமூக படிமுறை வளர்ச்சியில் பரதவர் சமூகத்தில்; நடந்த சில சம்பவங்களை கோர்த்தெடுத்து சுவையான ஒரு நாவலாக வழங்கியிருக்கிறார். மன்னாருக்கும் கொழும்புக்குமான வரலாற்றுத் தொடர்புகளை -குறிப்பாக, வங்காலை பரதவ சமூகத்தின் கொழும்புடனான வாணிபத் தொடர்புகள் சம்பந்தமாக விரிவான தகவல்களை இந்நாவல் வழங்குகின்றது. வறண்ட நிலப்பரப்பு, சதுப்பு நிலங்கள், அனல் கக்கும் உப்புக் காற்று என வங்காலை பரதவ சமூகத்தின் வாழ்விடத்தை வடிவமைக்கும் இந்நாவல், அந்த மண்ணின் கதா பாத்திரங்களாக ஆனாப்பிள்ளை, வீரசிங்கம் சம்மாட்டி, பெரிய சம்மாட்டி, சூசை மோசே, தங்கக் கடத்தல்காரன் தனுஸ் தண்டேல், வயதான கஸ்பர் குலாஸ், இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட இளுவறியம்மான், உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் அவுறான், கொழும்பு பெருவணிக முதலாளிகள், உள்ளூர் சிறு வணிகர்கள் என பல கதாபாத்திரங்களின் வாயிலாக இந்நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. சீமான் பத்திநாதன் பர்ணாந்து 2020இல் கலாபூஷணம் விருதினை பெற்றவர். ஞானம் சஞ்சிகையின் சிறந்த நூல்களுக்கான விருதினை வென்ற நாவல் இது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 111402).