ஆவூரான் (இயற்பெயர்: சண்முகம் சந்திரன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xvi, 72 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-69-7.
தன் பூர்வீக நிலமான நெடுந்தீவு மண்ணைக் களமாகக் கொண்டு இக்குறுநாவலை ஆவூரான் படைத்துள்ளார். ஒரு விடுதலைப் போராளியாய், நற்பணியாளராய், சமூக உணர்வாளனாய், படைப்பாளியாய் தன்னைப் புடம்போட்டு வளர்த்துக்கொண்ட ஆவூரான் தாயகத்திலிருந்து புலம்பெயர்;ந்து அவுஸ்திரேலியாவில் தற்போது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். நெடுந்தீவில் நிகழும் கதை இது. தன் எட்டு வயதில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு முப்பது வருடங்கள் சிறையிலிருந்துவிட்டு ஊருக்குத் திரும்பும் சின்னானின் வாழ்க்கைதான் இந்த நாவல். பறை வாசிக்கும் காத்தானின் மகனான சின்னானும் அவருடைய சுற்றத்தினரும் அவர்கள் செய்யும் தொழில் சார்ந்த சாதியின் பெயராலேயே ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்படுகிறார்கள். சிறை வாழ்க்கையிலும் சின்னான் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறார். பின்னர் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரின் ஆதரவால் சிறையிலேயே சிங்கள மொழியில் கல்வி கற்று நன்னடத்தையின் பேரின் முப்பது ஆண்டுகள் கழித்து ஊருக்குத் திரும்புகிறார். ஆனால் அப்போதும் அவ்வூர் கோயில் தர்மகர்த்தாவும் அவரது பரிவாரங்களும் சின்னானை நிம்மதியாக இருக்க விடுவதாயில்லை. அவரை மீண்டும் சிறையில் அடைக்கும் முயற்சியில் அந்தத் தர்மகர்த்தா முழு முயற்சியுடன் ஈடுபடுகின்றார்;. சாதித் தடிப்பும் சாதியின் பெயரால் நிகழும் கொடுமையும் இத்தனை வருடங்கள் கழிந்தும் ஊரில் இன்னமும் உயிர்ப்போடு இருக்கின்றன என்பதை சின்னான் அறிகிறார். இந்த நிலையை சின்னான் எப்படிச் சமாளித்தார் என்றும் அவர் உண்மையிலேயே யார் என்று அறிவதும் மீதிக்கதை. ஜீவநதியின் 254ஆவது வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.