எஸ்.அகஸ்தியர். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, வைகாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
200 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-94-9.
அகஸ்தியர் பாரிஸ் நகரில் புலம்பெயர்ந்து வாழ்ந்த வேளையில் 1986இல் பாரிசில் ‘தாயகம்’ இதழில் இரண்டு இதழ்களில் தொடராக வெளியிட்ட நிலையில் அச்சுறுத்தல் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்ட ‘சுவடுகள்’ தொடர்கதையின் நூல்வடிவமே இதுவாகும். முப்பத்தி ஏழு ஆண்டுகளின் பின்னர் இந்நாவல் நூலுருவாகின்றது. ஒரு ஈழத்தமிழ் படைப்பாளியின் எழுத்துச் சுதந்திரம்- புலம்பெயர் தேசத்தில் அதுவும் சமத்துவத்துக்காக முழக்கமிட்டு வரலாறுபடைத்த பாரிஸ் நகரிலேயே முடக்கப்பட்ட மற்றொரு வரலாறு எம்மவர்களால் பாரிஸ் மண்ணில் எழுதப்பட்டுவிட்டது. இந்த நாவல் ஈழத்தின் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தைப் பற்றிய ஓர் இலக்கியப் பதிவாகும். இந்த நாவலில் வரும் பாத்திரங்கள், அவலங்கள், இராணுவ சுற்றிவளைப்புகள் முதலானவற்றை அகஸ்தியர் அன்று தனது சொந்த அனுபவத்தில் தரிசித்தவர். இராணுவ வன்முறையால் தமிழ்மக்கள் பாதிக்கப்பட்ட அவலம் அவர் நெஞ்சை எப்போதுமே வருத்திவந்துள்ளது. ஆனைக்கோட்டையில் அமரர் அகஸ்தியர் வாழ்ந்த காலத்தில் இலங்கை இராணுவம் ஒரு கிராமத்தைச் சுற்றிவளைத்து நடத்திய அராஜகச் செயலைத் தானே நேரில் பார்த்து, உணர்ந்து, அனுபவித்து எழுத்திலே வடித்த உயிர்ப்புள்ள நாவல் இது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 273ஆவது நூலாக வெளிவந்துள்ளது.