கே.எம்.எம்.இக்பால். கிண்ணியா-4: கே.எம்.எம்.இக்பால், அப்துல் மஜீது எம்.பி.வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (திருக்கோணமலை: குரல் பதிப்பகம்).
156 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-0690-02-2.
மூதூரைப் பிறப்பிடமாகவும், கிண்ணியாவை வாழ்விடமாகவும் கொண்ட கலாபூஷணம் ஜனாப் கே.எம்.எம்.இக்பால் எழுதிய இந்த வரலாற்று நாவல் பேருவளையில் பதினொரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் (கி.பி.920) சிங்கள மக்களின் ஒத்துழைப்புடனும், தமிழ் மக்களின் ஆசீர்வாதத்துடனும் கட்டப்பட்ட இலங்கையின் முதலாவது பள்ளிவாசலின் வரலாற்றுப் பின்புலத்தில் நின்று எழுதப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் (கி.பி.912-929) அனுராதபுர மன்னன் நான்காம் காசியப்பன் ஆட்சியில் இருந்துள்ளான். அக்காலத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாக, இன மத பேதமின்றி வாழ்ந்திருந்த சமூக வாழ்வையும், முஸ்லிம்கள் இந்நாட்டிற்கு வைத்தியம், வர்த்தகம் முதலியவற்றில் ஆற்றிய அளவிடற்கரிய பங்களிப்பையும் இந்நாவலில் எளிமையான தமிழில் விபரித்துச் செல்கிறார். முஹம்மது நபி பிறப்பதற்கு முன்பே அரேபியர்கள் இலங்கையில் குடியேறி வாழ்ந்திருந்த வாழ்க்கையையும் எம் கண்முன் கொண்டுவரும் இந்நாவலில், அக்காலத்தில் வீசிய மாசற்ற வளியை சுவாசிக்கும் உணர்வினையும், மரங்கள் சூழ்ந்த வர்ணப் போர்வைகள் கொண்டு பசும்புல் போர்த்திய நஞ்சற்ற மண்ணில் தம் பாதம் பதித்து மானசீகமாக நடப்பதற்கும் வாசகருக்கு வழியமைத்துத் தந்துள்ளார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 110180).