சீமான் பத்திநாதன் பர்ணாந்து. மன்னார்: சீமான் பத்திநாதன் பர்ணாந்து, நானாட்டான், 1வது பதிப்பு, நவம்பர் 2020. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோயில் வீதி).
vi, 106 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-43624-6-8.
எண்பதுகளின் தொடக்கத்தில் நிலவிய மன்னாரின் சமூகச் சூழலும் அதனோடிணைந்த பல்வேறு அக, புறக் காரணிகளின் தாக்கமும் சேர்ந்தவையாகக் கதையின் பின்புலம் அமைந்துள்ளது. விடுதலைப் போராட்டம், அதன் விளைவாக ஏற்பட்ட வறுமை, வன்முறைச் சம்பவங்கள், இடப்பெயர்வு, அபாயகரமான கடற்பயணம் என இயல்புக்கு மாறான பல சம்பவங்கள் அடுத்தடுத்து மனித வாழ்வில் நிகழும்போது, மனிதக் கலாசாரப் பண்பாட்டு அம்சங்களிலும் அவை சார்ந்த நம்பிக்கைகளிலும் நிகழும் மாற்றங்களை இந்நாவல் அழகாகச் சித்திரிக்கின்றது. இந்நாவலின் பிரதம கதாபாத்திரங்களாக செல்லாச்சி மாமியும் கருணாகரனும் வடிவமைக்கப்பட்டுள்ளனர். நாவலின் பயணப்பாதையில் போராட்டக் காலத்தின் தொடக்கத்தில் மன்னார்க் கிராமங்களின் நிலைமை தெளிவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. போராளிகளுக்கு உணவளித்தல், இராணுவச் சுற்றிவளைப்பு, கடத்தல், காணாமல் போதல், சுடப்படுதல் போன்ற நிகழ்வுகள் மீள்நினைவூட்டப்படுகின்றது. நாட்டின் மோசமான பொருளாதார நிலைமைகளை எதிர்கொள்ளவியலாதவர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவென தமிழகம் நோக்கிய ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொள்ளத் துணிதல், அவ்வாறான கடற்பயணங்களின் போதான அவலச் சாவுகள் என ஏராளமான தகவல்கள் இந்நாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆசிரியரின் ஐந்தாவது படைப்பு இது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 112345).