சு.குணேஸ்வரன். யாழ்ப்பாணம்: மீளுகை-2, இமையாணன், உடுப்பிட்டி, 1வது பதிப்பு, ஜுலை 2023. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).
viii, 75 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-955-51949-8-3.
சங்கத் தொகையாக்கத்தில் முதலில் வைத்தெண்ணப்படும் அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் நடுகல் வழிபாடு, பலியிடுதல் முதலான குறிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. மூத்தோர் வழிபாடாக நடுகற்கள் இயற்றப்பட்டமையும் தம் குலத்தைக் காத்த தெய்வங்களுக்கு உணவுப் பொருட்களைப் படைத்து பலியிட்டு வழிபாடு செய்யப்பட்டமையும் அவற்றில் பதிவாகியுள்ளன. நீர் மேலாண்மை பற்றியும் நீர்ப்பண்பாடு பற்றியும் பரிபாடலின் வையைப் பாடல்கள் விரிவாக எடுத்தியம்புகின்றன. தொல்தமிழரின் இயற்கையோடிணைந்த பண்பாட்டுக் கூறுகள் எமது நேரிய வாழ்வுக்கு இன்றும் அடிப்படையாக இருப்பதை இக்கட்டுரைகளை ஒருசேர வாசிக்கும்போது அறிந்துகொள்ள முடியும். இத்தொகுதியில் சங்க இலக்கியங்கள் தொடர்பாக எழுதிய நான்கு கட்டுரைகளும் அதன் பிற்கால இலக்கியங்கள் தொடர்பாக எழுதிய இரண்டு கட்டுரைகளும் உள்ளடங்கியுள்ளன. இந்நூலில் சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகல், சங்கச் சமூக வழிபாட்டு மரபில் பலியிடுதல், பரிபாடல் வையைப் பாடல்களில் நீர்வழிபாடும் சமூகமும், திருமுருகாற்றுப்படையில் சமயம்- பண்பாட்டியல் நோக்கு, திருக்குறளில் நீர்ப்பண்பாடு, சுந்தரரின் பதிகங்களில் இயற்கை இன்பம் ஆகிய ஆறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.