ஈழக்கவி (இயற்பெயர்: ஏ.எச்.எம்.நவாஸ்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆவணி 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
116 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-6601-03-4.
ஈழக்கவி என்ற பெயரில் 1980களிலிருந்து எழுதிவரும் ஏ.எச்.எம்.நவாஸ், ஊவா மாகாணத்தில் வெலிமட என்ற மலைசூழ் நகரை பூர்வீகமாகக் கொண்டவர். பேராதனை பல்கலைக்கழகத்தில் மெய்யியல்துறையில் சிறப்புப் பட்டம் பெற்று அப்பல்கலைக்கழக மெய்யியல் உளவியல் துறையில் சிறிதுகாலம் (1995-2000) விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். கல்வித்துறையில் இணைந்த பின்னர் அதிபராகக் கடமையாற்றி 2024இல் ஓய்வுபெற்றவர். இரவின் மழையில் (2013), ஏவாளின் புன்னகை (2015) ஆகிய இரு கவிதைத் தொகுப்புகளை வழங்கியவர். ஆய்வு, விமர்சனத்துறைகளில் பன்னிரு நூல்களை இதுவரை வழங்கியுள்ளார். இந்நூலில் ஏ.எச்.எம்.நவாஸ் எழுதிய மு.தளையசிங்கத்தின் ‘ஒரு தனி வீடு’ புனைவுப் பிரதியின் அரசியல் பற்றிய ஒரு விமர்சனம், செங்கை ஆழியான்: எழுதிக் குவித்தலும் ‘பிரளயம்’ நாவலும், புத்தம் வீடும் வீடும் பேச்சு மொழியும் சில குறிப்புகள், சாந்தனின் ‘ஒட்டுமா’ சிங்கள தமிழ் உறவுகளை நாசூக்காக ஆராயும் ஒரு சொற்சித்திரமா?, உயிர்ப்புடன் மேலோங்கி நிற்கும் த.கலாமணியின் ‘பாட்டுத் திறத்தாலே’ சிறுகதைகள், ஒரு தனி அநுபவ முத்திரை பெற்றிருக்கும் அல் அஸுமத் சிறுகதைகள், எஸ்.ஏ.உதயனின் ‘குண்டு சேர்’ பிரதி பற்றி, புகலிட இலக்கியமும் வ.ந.கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ நூலும், காலத்தின் காலாகிய வரதரின் ‘கயமை மயக்கம்’ ஆகிய ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 375ஆவது நூலாக வெளிவந்துள்ளது.