கே.எஸ்.சிவகுமாரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
iv, 68 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-42-9.
கே.எஸ்.சிவகுமாரனின் பத்தி எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக ஈழத்துப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் அவர் தொடர்ச்சியாகப் பத்திகள் எழுதி வந்திருக்கிறார். மனத்திரை, சருகுகள், சித்திர தர்சினி, கனபரிமாணம், நாற்சாரம், சொன்னாற்போல முதலிய பத்திகளையும் மதிப்புரைகளையும் அறிமுகக் கட்டுரைகளையும் அதிக எண்ணிக்கையில் நீண்டகாலப் பரப்பில் சிவகுமாரன் எழுதியுள்ளார். அத்துடன் ஆங்கில ஊடகங்களிலும்; தமிழ் இலக்கியப் படைப்புகளை தமிழ் மொழியறியாத வேற்று மொழியினருக்கு ஆங்கிலத்தில் எழுதி முக்கிய பணியையும் அவர் ஆற்றி வந்துள்ளார். கலை இலக்கியம் சினிமா என பல்வேறு துறைகள் சார்ந்த அவரது பத்திகள் வாசகர்களுடன் பல விஷயங்கனைளயும் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் எழுதப்பட்டவை. மேற்குலகக் கலை இலக்கியம் பற்றிய ஈழத்து வாசகர்களுக்கான பல தகவல்களையும் அவரது பத்திகள் உள்ளடக்கியிருந்தன. அவ்வகையில் சொன்னாற்போல என்ற பத்தி எழுத்துக்களின் மூன்றாவது தொகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதில் பிரசாந்தி நிலையமும் பனாஜியும் (Paanaji), ஜேர்மனியில் ஈழத்து தமிழ் அகதிகள் எதிர்கொள்ளும் நாடகம் – ‘காதல் பூட்டு’, மேலை இலக்கியம்ஃமெய்ப்பொருள், ஈழத்துப் பெண்களின் தனித்திறமைகள், Post Modernism, ‘பின் நவீனத்துவம்’ தொடர்பான ஈழத்துத் தமிழ் நூல்கள்-01, ‘பின் நவீனத்துவம்’ தொடர்பான ஈழத்துத் தமிழ் நூல்கள்-02, செ.கணேசலிங்கன் என்ற ஆய்வறிவாளர், 21ஆம் நூற்றாண்டு புலமையும் ஆய்வறிவும் இணைந்த உலகத் தமிழன், நான்கு இஸ்லாமியக் கவிதை நூல்கள், செவிநுகர் இன்பம்/நீர்வையின் கதைகள் பற்றிய ஆய்வரங்கு, ஈழத்துக் கவிஞர்களும் புலவர்களும், முன்னோடித் தமிழ் ஒலிபரப்பாளர் வீ.ஏ.சிவஞானம், ஈழத்து ஆங்கில இலக்கியம்: சில விபரங்கள், பிரெஞ்சுக் கவிதைகள் தமிழில் ஆகிய 15 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 154ஆவது நூலாக வெளிவந்துள்ளது.