இரா.கிருஷ்ணபிள்ளை (புனைபெயர்: இராகி), அருள்மலர் தயாபரன்; (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: மலரகம், நடராஜானந்தா வீதி, காரைதீவு-2, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (சாய்ந்தமருது: ரோயல் அச்சகம்).
80 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 20.5×14.5 சமீ.
அமரர் இரா.கிருஷ்ணபிள்ளை (1939-2022) அவர்கள் எழுதிய சிறுகதை, நாடகம், வில்லுப் பாட்டு, பேச்சு ஆகியவற்றின் தொகுப்பாக அவரது மறைவின் முதலாம் ஆண்டு நினைவாக இந்நூல் வெளிவந்துள்ளது. இத்தொகுப்பில் காகிதப்பூக்கள் (சிறுகதை), யாகாவாராயினும் நாகாக்க (வில்லுப் பாட்டு), நீதி வழுவா மனுநீதிச் சோழன் (வில்லுப் பாட்டு), சபதம் (நாடகம்), மதி-விதி-சதி (நாடகம்), பக்தியோ பக்தி (நாடகம்), மீண்ட சொர்க்கம் (நாடகம்), தமிழின் இனிமை (பேச்சு), போதைவஸ்து (பேச்சு), நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் கல்விப் பணி ஆகிய 11 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. அமரர் இரா.கிருஷ்ணபிள்ளை பாண்டிருப்பில் 15.09.1939இல் பிறந்தவர். 1961இல் பாண்டிருப்பு அரச தமிழ் கலவன் பாடசாலையில் உதவி அசிரியராகப் பணியில் இணைந்த இவர், 1963இல் மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையில் பயிலுனர் ஆசிரியராக பயிற்சிபெற்று, 1965இல் ஹட்டன் ஹைலண்ட் கல்லூரியில் பயிற்றப்பட்ட உதவி ஆசிரியராகப் பணியில் இணைந்தார். தொடர்ந்து லுணுகலை, அக்கரைப்பற்று, காரைதீவு ஆகிய இடங்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய வேளையில் 1982இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டு, பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியராக காரைதீவு விபுலாநந்தா தமிழ் மகாவித்தியாலயம் (1983), நிந்தவூர் அல் அஷ்றக் மகாவித்தியாலயம் (1984) ஆகிய பாடசாலைகளில் பணியாற்றினார். பின்னர் 1988இல் கல்முனை மல்வத்தை விபலாநந்தா வித்தியாலயத்தில் அதிபராகவும், 1989இல் காரைதீவு விபுலாநந்தா மத்திய மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபராகவும் பணியாற்றினார். 16.12.1996இல் சேவை ஓய்வுபெற்ற இவர் 20.09.2022இல் காரைதீவில் தனது தாய்மண்ணில் இறைபதமெய்தினார்.