எல்.சாந்திகுமார் (மூலம்), நந்தலாலா (பதிப்பாசிரியர் குழு). ஹற்றன்: நந்தலாலா பதிப்பகம், 133, 1/1, திம்புல்ல வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2022. (ஹற்றன்: நந்தலாலா பதிப்பகம், 133, 1/1, திம்புல்ல வீதி).
364 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 22.5×15.5 சமீ.
ஓர் இலக்கியகர்த்தாவாக, வரலாற்றாய்வாளராக, அரசியல் செயற்பாட்டாளராக, மார்க்சிய சிந்தனையாளராக அறியப்பட்டவர் லக்ஷ்மன் சாந்திகுமார். இளம் சட்டத்தரணியான சாந்திகுமார், காத்திரமான இரண்டு இலக்கிய ஏடுகளான ‘நந்தலாலா’, ‘தீர்த்தக்கரை’ ஆகியவை மலையகத்தில் வெளிவருவதற்கு முக்கிய காரணியாகவிருந்தவர். அதன் பின்னர் படித்த இளைஞர்கள் இவரது தலைமையில் கூடி மலையக மக்கள் முன்னணியை உருவாக்கி நேரடியாக அரசியலில் இறங்கினர். மலையகத்தில் சமூக அரசியல் தோற்றம் பெறுவதற்கு சாந்திகுமார் வழி சமைத்தார் என்பது மலையக வரலாற்றில் பதிவாகவேண்டிய முக்கிய குறிப்பாகும். இந்நூலின் முதற் பகுதியில் 07.10.2020இல் மறைந்த லக்ஷ்மன் சாந்திகுமாருக்கு சமுத்திரன், மு.சிவலிங்கம், பகவதாஸ் ஸ்ரீஸ்கந்ததாஸ், பெருமாள் சரவணகுமார், எம்.எம்.ஜெயசீலன், எல்.ஜோதிகுமார் ஆகியோர் வழங்கிய அஞ்சலிக் கட்டுரைகளும், ஜேம்ஸ் விக்டர், ஆதவன் ஆகியோரின் அஞ்சலிக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் எல்.சாந்திகுமார் எழுதிய ஒன்பது அரசியல் சமூகக் கட்டுரைகளும் (மலையகம்-சில குறிப்புகள், மலையகத்தின் வரலாறும் சமூக உருவாக்கமும் 1, மலையகத்தின் வரலாறும் சமூக உருவாக்கமும் 2, இனவெறியாட்டம் -மலையக மக்களின் எதிர்காலம், மார்க்சியத்தின் சமகால தத்துவார்த்த ஸ்தாபன பிரச்சினைகள் குறித்து-, தேசியங்களும் தேசிய இனங்களும் குறித்த மார்க்சிய கண்ணோட்டம், மூன்றாம் உலக நாடுகளில் இடதுசாரி இயக்கங்களும் இலங்கையும், மலையக மக்கள் இலங்கைத் தமிழரா?, கூலித் தமிழ்), ஒரு இலக்கியக் கட்டுரையும் (குமரன் சிறுகதைகள்: விமர்சனமும் வேண்டுகோளும்), மூன்று மொழிபெயர்ப்புகளும் (என்னைப் பேசவிடுங்கள், சாத்தானின் புதல்வன், சிங்கத்தின் பாதம்), இரண்டு சிறுகதைகளும் (உதய காலத்து ஜனனங்கள், நண்பனே என்றும் உன் நினைவாக) இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 72544).