கட்டைவேலி ஞானாசாரியார் கல்லூரி மாணவ எழுத்தாளர்கள். நெல்லியடி: நெல்லியடி கலை இலக்கிய நண்பர்கள் கழகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (நெல்லியடி: கலாலய அச்சகம்).
24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
வடமராட்சியில், கட்டைவேலி ஞானாசாரியார் கல்லூரி மாணவ எழுத்தாளர்கள் எண்மர் ஒரு குழுவாக இணைந்து, தமது பிரதேசத்தின் எழுத்தாளரான நெல்லை க.பேரன் (கந்தசாமி பேரம்பலம்) அவர்களை நேர்கணல் செய்து சிறிய நூலுருவில் வெளியிட்டிருந்தார்கள். ஆ.மாயூரன், சி.சிவரூபன், கு.கஜேந்திரா, வி.பரமதாஸ், அ.மோசஸ் அனோஜ் ஆகிய மாணவர்களும், ஈ.அகல்யா, சி.கலைமகள், சி.அருட்செல்வி ஆகிய மாணவிகளும் இந்நேர்காணலை மேற்கொண்டிருந்தனர். 1985இல் மேற்கொள்ளப்பட்ட இந்நேர்காணலே நெல்லை க.பேரன் அவர்களின் வாழ்வும் இலக்கியப் பணிகளும் பற்றிய முதல்நிலைத் தகவல்களை வழங்கிய ஒரே ஆவணமாகும். ஆறு ஆண்டுகளின் பின்னர் 15.07.1991 அன்று இலங்கை இராணுவம் ஏவிய எறிகணை ஒன்று பேரனின் வீட்டில் வீழ்ந்ததில் பேரன், மனைவி உமாதேவி, மகன் உமாசங்கர் (14 வயது), மகள் சர்மிளா (7 வயது) ஆகிய நால்வரைக் கொண்ட பேரன் குடும்பம் கொல்லப்பட்டது. அவரது வாழ்நாள் சேகரிப்புகளும் அழிந்திருந்தன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37424).