கே.கணேஷ் (மூலம்), கே.பொன்னுத்துரை (தொகுப்பாசிரியர்). தெகிவளை: கே.கணேஷ் நூற்றாண்டு விழாக் குழு, எண் 09, ரட்ணகார பிளேஸ், 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
x, 350 பக்கம், புகைப்படங்கள்., விலை: ரூபா 3000., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-624-94127-0-5.
கண்டியில் உள்ள அம்பிட்டி என்னும் இடத்தில் பிறந்த கணேஷ் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்திலும், திருவையாறு ராஜா கல்லூரியிலும் கல்வி கற்றார். நவசக்தி, லோகசக்தி போன்ற தமிழக இதழ்களில் கவிதைகள் எழுதினார். 1940களில் ‘மணிக்கொடி’ இதழில் இரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார். வீரகேசரி, தேசாபிமானி ஆகியவற்றில் சிறுகதைகள் எழுதினார். 1940களின் பிற்பகுதியில் வீரகேசரியில் ஆசிரியர் குழுவிலும், 1950களில் சுதந்திரனில் செய்தியாசிரியராகவும் பணியாற்றினார். கணேஷ் தமிழகத்திலும் இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பிப்பதில் பங்காற்றியவர். 1940களின் நடுப்பகுதியில் இலங்கை வந்த எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் முன்னிலையில் இலங்கை எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். சுவாமி விபுலாநந்தரைத் தலைவராகக் கொண்ட இச்சங்கத்தின் செயலாளராக கணேஷ் விளங்கினார். 1946 இல் ‘பாரதி’ என்ற முற்போக்குக் கலை இலக்கிய இதழை கே. இராமநாதனுடன் இணைந்து தொடங்கி 1948 வரை நடத்தினார். மொழிபெயர்ப்புத் துறையில் கணேஷின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ.அப்பாஸ், லூ சுன், ஹோ சி மின், சாந்தோர் பெட்டோசூஃபி முதலிய எழுத்தாளர்களின் படைப்புக்களை கணேஷ் தமிழுக்குத் தந்துள்ளார். கணேஷின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை 22 ஆகும். கே. கணேஷ் 2004 ஆம் ஆண்டில் தனது 86வது வயதில் மலையகத்தின் தலாத்து ஓயாவில் காலமானார். கணேஸ் அவர்களின் 22 நூல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பு முயற்சிகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. பி.பி.தேவராஜின் எழுத்தாளர் கே.கணேஷ் பற்றிய அறிமுகக்கட்டுரை, பேராசிரியர் சபா ஜெயராசாவின் கட்டுரை, ‘ஞானம்”ஆசிரியர் தி.ஞானசேகரன் கே.கணேஷ் அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணல் என்பவை கே.கணேஷின் பன்முக ஆளுமையினை வெளிப்படுத்தும் கட்டுரைகளாக அரம்பத்தில் இடம்பெற்றுள்ளன. இலங்கை எழுத்தாளர் சங்கம், முற்போக்குத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆகியவற்றில் அவரது பங்களிப்பு, அவரது குடும்பப் பின்னணி, மணிக்கொடி போன்ற தமிழக சஞ்சிகைகளில் வெளியான அவரது படைப்புகள், அவரைப் பாதித்தக் கலை, இலக்கிய ஆளுமைகள், அவர் மொழிபெயர்த்த உலக முற்போக்கு எழுத்துலகச் சிற்பிகளின் படைப்புகளின் பகுதிகள் ஆகியவற்றுடன் அவர் மொழிபெயர்த்த முல்க்ராஜ் ஆனந்தின் ‘தீண்டாதான்’ (Untouchable) முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளது. இவர் மொழிபெயர்ப்பில் கே.ஏ.அப்பாஸின் சிறுகதை ‘குங்குமப்பூ’ என்னும் பெயரில் இடம்பெற்றுள்ளது. சீன எழுத்தாளர் லூசுன், வியட்நாமின் தந்தை ஹோ சி மின் உட்படப் பல உலக முற்போக்கு எழுத்தாளர்களின் புனைவுகள், கவிதைகள் என்பனவும் சேர்க்கப்பட்டுள்ளன. கே.கணேஷின் இரு சிறுகதைகளும் நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவரது மொழிபெயர்ப்பில் வெளியான நூல்களின் அட்டைப்படங்களையும் நூல் கொண்டுள்ளது. கே.கணேஷ் எழுதிய நூல்களின் பெயர்ப்பட்டியல், பெற்ற விருதுகள் பற்றிய விபரங்கள், அவரது பணி, இலக்கிய அமைப்புகளில் அவரது அங்கத்துவம், பங்குபற்றிய இலக்கிய மாநாடுகள் போன்ற விபரங்களையும் இந் நூல் தருகிறது.