ஹம்சகௌரி சிவஜோதி, கஜீபன் பாலசிங்கம் (தொகுப்பாசிரியர்). லண்டன் IG5 0RB: தேசம் பதிப்பகம், 225 Fullwell Avenue, Clayhall, Ilford, 1வது பதிப்பு, நவம்பர் 2023. (யாழ்ப்பாணம்: Jemfar Printing Industries 7, உடுவில் மகளிர் கல்லூரி கிழக்குத் தெரு).
(8), 104 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21×15 சமீ.
கிளிநொச்சிப் பிரதேச ஆளுமைகள் நூற்றுவரின் விபரங்கள் அடங்கிய தொகுப்பு. பிரமுகர்களின் பெயர், பெற்றோர் விபரம், பிறந்த நாள், பிறந்த இடம், கல்விச் செயற்பாடுகள், தொழிற்கல்விச் செயற்பாடுகள், வகிக்கும் பதவிகள், தொடர்புக்கான தொலைபேசி இலக்கம், தற்போதைய முகவரி, அவர் எழுதிய வெளியீடுகளின்; விபரம், அவரது பணிகளின் விபரம் ஆகியவை ஒவ்வொரு ஆளுமையின் புகைப்படத்துடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முக்கியமான சில ஆளுமைகள் விடுபட்டுள்ளதை நேர்மையுடன் பட்டியலிட்டுக் குறிப்பிடும் அதேவேளை, அடுத்த பதிப்பில் இவை உள்ளடக்கப்படும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள். இத்தகைய முயற்சிகளுக்கு சம்பந்தப்பட்ட ஆளுமைகளும் உரிய தகவல்களை வழங்குவதில் கணிசமான பங்கினை ஆற்றவேண்டும் என்பது பொதுவாக எதிர்பார்க்கப்படுவதுதான். யார் எவர்? (Who’s Who) என்ற உசாத்துணை சாதனம், கலைக்களஞ்சியங்கள் போன்று காலத்திற்குக் காலம் இற்றைப்படுத்தப்படவேண்டியவை. நிறுவனரீதியாக இதனை மேற்கொள்ள முயலும் ‘லிட்டில் எய்ட்’ அமைப்பினர் இதனை பொறுப்புணர்வுடன் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையை முன்னுரையில் வெளிப்படுத்தியிருப்பது நல்லதொரு அறிகுறியாகும். மற்றைய மாவட்டங்களுக்கும் இந்நூலின் தொடர் வருகை ஒரு முன்னோடி வழிகாட்டியாக அமையும் என்ற நம்பிக்கையைத் தருகின்றது. தொகுப்பாளர்கள் இருவரும் கிளிநொச்சி ‘லிட்டில் எயிட்’ அமைப்பின் நிர்வாக பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.