17882 அஷ்ஷஹுத் அஹ்மத் லெப்பை ஹாஜியார் வாழ்வும் பணியும்.

எம்.எச்.எம்.புஹாரி (பலாஹீ). காத்தான்குடி: பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், 1வது பதிப்பு, மார்ச் 2014. (காத்தான்குடி: டொட்லைன் ஓப்செட் பிரின்டர்ஸ், பிரதான வீதி, காத்தான்குடி).

(3), 97 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-41143-0-2.

காத்தான்குடி முன்னாள் பட்டின ஆட்சி மன்றத் தலைவர் அல்ஹாஜ் அஷ்ஷஹீத் அஹமத் லெப்பை தமிழ் சிங்கள முஸ்லிம் சமூகத்தினரோடு சேர்ந்தியங்கி, சமூக, சமய ஒற்றுமை அபிவிருத்திப் பணியில் ஆரம்ப முதற்கொண்டே ஈடுபட்டுவந்தவர். இவர் காத்தான்குடி பிரதேசத்தில் காந்தி சேவா மன்றம், பாரதி மன்றம், தமிழ் விழாக்கள், சமூக சமய ஒற்றுமை மகாநாடுகள் முதலியவற்றிலும் பங்குபற்றி ஏனைய இன மக்களின் ஆதரவையும் அபிமானத்தையும் பெற்றிருந்தவர். தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்ற போராட்டம், சிறி எதிர்ப்பு போராட்டம், கச்சேரி முன்மறியல் போராட்டம், மேதின விழாக்கள், மட்டக்களப்பில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் முதலியவற்றில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டதோடு மாத்திரமன்றி தழிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காகவும் இறுதிவரை பாடுபட்டார். 1988ம் ஆண்டு மார்ச் மாதம் 06ம் திகதி இரவு காத்தான்குடி 4ம் குறிச்சியிலுள்ள ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியில் இருந்து பழைய கல்முனை வீதி (ஊர் வீதி) வழியாக 02ம் குறிச்சியில் இருந்த அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது சக முஸ்லிம் இனத்தவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரால் தோற்றுவிக்கப்பட்ட காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், அவரது வாழ்வும் பணிகளும் தொடர்பான தகவல்களை உள்ளடக்கி இந்த நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. 15 பிரமுகர்கள் கொண்ட குழுவொன்றும் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டது. அல்ஹாஜ் மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி) அவர்கள் இக்குழுவின் தலைவராகவும், மெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபர் ஜனாப் எஸ்.எல்.ஏ. கபூர் செயலாளராகவும் இருந்து இந்நூலைத் தொகுத்தனர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 88773).

ஏனைய பதிவுகள்