பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ ஞானப்பிரகாச முனிவர் ஞாபகார்த்த சபை, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 2024. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், திருநெல்வேலி, இருபாலை).
iv, 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5901-26-5.
யாழ்ப்பாணத்து திருநெல்வேலி ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச முனிவர் ஈழத்துச் சைவசித்தாந்த புலமையாளர்கள் வரிசையின் முன்னோடியாவார். இவர் சம்ஸ்கிருத மொழி, தமிழ் மொழி இரண்டிலும் மிகுந்த பாண்டித்தியமுடையவர். சிறப்பாக சைவசித்தாந்த மரபிலும், சிவயோக மரபிலும் மிகுந்த புலமையும் பாண்டித்தியமும் உடையவர். இவரது ஆக்கங்களுள் இதுவரை வெளியிடப்படாத பௌஷ்கராகம விருத்தி இந்தியாவில் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றமை சிறப்பம்சமாகும். ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச முனிவரது சம்ஸ்கிருத ஆக்கங்களுள் சிவயோகரத்னம், அக்ஞான விவேசனம் ஆகிய இரு நூல்கள் தமிழ்மொழி பெயர்ப்புடன் வெளியிடப்பட்டுள்ளன. ஏனைய நூல்களான சிவயோகசாரம், பிரமாணதீபிகா, பிரமாணதீபிகா விருத்தி, சித்தாந்திகமணி, சிவஞானபோத விருத்தி, பௌஷ்கராகம விருத்தி ஆகியன தமிழ் மொழிபெயர்ப்புடன் வெளிவரவேண்டியுள்ளன. அவ்விதம் வெளிவருமிடத்து சைவசித்தாந்த புலமைசார் அறிகைக்கு உயர்ந்த வரப்பிரசாதமாக அமையும். அதே போன்று ஞானப்பிரகாசரது சிவஞானசித்தியார் உரையும் தற்கால மொழிவழக்கிற்கு ஏற்ப வெளிவரின் மிகுந்த பயனுடையதாய் அமையும்.