17896 தலைவர் சிவா (1923-2023) நூற்றாண்டு நிறைவு நினைவு வெளியீடு-ஆவணத் தொகுப்பு.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: அமரர் முருகேசு சிவசிதம்பரம் நூற்றாண்டு நிறைவு நினைவுக் குழு, 1வது பதிப்பு, 2023. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா அச்சகம், பிரதான வீதி, நெல்லியடி).

xx, 316 பக்கம், ஒளிப்படங்கள், 25 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

இம்மலரில் சிவாவின் (முருகேசு சிவசிதம்பரம்) சுவடுகள், ஜின்னாஹ் அவர்களின் வாழ்த்துப்பா, கீழ்கரவை குலசேகரனின் வாழ்த்துப்பா ஆகியவற்றைத் தொடர்ந்து செய்திகள், சிவசிதம்பரம் அவர்களின் உரைகளும் பேட்டிகளும், அனுதாபப் பிரேரணை மீதான உரையும் பத்திரிகைக் கண்ணோட்டமும், சிவசிதம்பரம் தொடர்பான ஆக்கங்கள்ஆகிய பிரிவுகளின் கீழ் விடயதானங்கள் வகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன.  முருகேசு சிவசிதம்பரம், (20.07.1923-05.06.2002) யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியின் கரவெட்டியில் பிறந்தவர். இவர் கரவெட்டி சரசுவதி வித்தியாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்று, விக்னேசுவரா கல்லூரியில் மெட்ரிக்குலேசன் வரை பயின்று சித்தியடைந்தார். இளவயதிலேயே அரசியல் ஈடுபாடுகொண்டிருந்த இவர் 1956 தேர்தலில் பருத்தித்துறை தொகுதியில் சுயேச்சையாக நின்று தோல்விகண்டார். 1960இல் ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களின் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவ்வாண்டின் பாராளுமனற தேர்தலில் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்றார். 1961இல் சத்தியாக்கிரகத்திலும் ஒத்துழையாமை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இவர் 1965இல் மீண்டும் பாராளுமன்றம் சென்றார். 1967இல் உப சபாநாயகராக நியமிக்கப்பட்டார். 1976இல் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி நிறுவப்படுவதற்கு பெரிதும் உழைத்தார். 1977இல்தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளராக நல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1983இல் ஒற்றை ஆட்சியை வலியுறுத்தும் 6ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக தனது பதவியைத் துறந்த பின்னர் இதர தலைவர்களுடன் தமிழகம் சென்று ஈழப் போராட்டத்திற்கு சர்வதேச ஆதரவினைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். 1985 திம்புப் பேச்சுவார்த்தகைளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் கலந்துகொண்டார். 1989இல் துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் தப்பிய இவர் 2001இல் தமிழ்த் தேசிய கூட்டணியின் தேசியப்பட்டியலில் மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2002இல் ஜுன் 5ஆம் திகதி கொழும்பில் வைத்தியசாலையில் இயற்கை மரணம் எய்தினார். 

ஏனைய பதிவுகள்