17900 துயர் துடைத்த தூதுவன்.

அன்னபரிபூரணம் ஞானேஸ்வரன். தெல்லிப்பழை: மலர்க் குழு, அமரர் சிவமகாராசா உருவச்சிலை திறப்புவிழாச் சபை, கூட்டுறவுச் சங்க வளாகம், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). 

அமரர் சின்னத்தம்பி சிவமகாராசா (28.6.1938-20.08.2006) அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா நினைவுச் சிறப்பு மலர்-2016. ஆசியுரை, வாழ்த்துச் செய்திகள், வாழ்வியல், கூட்டுறவியல், அரசியலும் ஆன்மீகமும் ஆகிய தலைப்புகளின்கீழ்; இந்நூலில் தகவல்கள் பகுத்துத் தரப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘நமது ஈழநாடு’ பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளரான சி.சிவமகாராசா அவர்கள் அரசியற் சுயநலன்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதர். தன்னலமற்ற பணியால் அனைவரையும் கவர்ந்துகொண்ட ஒரு புரட்சிகரமான அரசியல்வாதியும் சமூகசேவையானருமாவார். எமது மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தவர். தமிழரின் வாழ்வு சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு சிதைந்து போவதை அவர் அறவே வெறுத்தார். இந்த இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து தமிழ் மக்கள் முற்றாக விடுபட்டு, விடுதலை பெற்று, சுதந்திரமாக, நிம்மதியாக, கௌரவமாக வாழ்வதையே தனது வாழ்வின் இலட்சியமாக அவர் வரித்துக்கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் போராட்ட இலட்சியத்தையும் முழுமையாக நேசித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்தார். அரசியல், ஆன்மீகம், கூட்டுறவு, ஊடகம் எனப் பல்வேறு பெரும் தளங்களில் இவர் செயற்பட்டார். இவரது செயற்றளம் அகன்று விரிந்திருந்தது. யாழ் மண்ணோடும் அந்த மண்ணில் மக்களோடும் ஒன்றியதாக அவரது வாழ்வு சுற்றித்திரிந்தது. இலங்கை இராணுவத்தின் அகோர ஆக்கிரமிப்புக்குள் அகப்பட்டுள்ள யாழ் மண்ணில் நின்றவாறு, எதிரியின் அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அசைந்துகொடுக்காமல் யாழ் மக்களுக்கு என்றுமே காப்பரணாக நின்றார். போர் நெருக்கடிமிக்க நாட்களில் அந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வழிசெய்தார். ஆக்கிரமிப்புப் படைகளின் அழிவுகளையும் அட்டூழியங்களையும் நெஞ்சுறுதியுடனும் நேர்மைத்திறனுடனும் உலகிற்கு வெளிக்கொணர்ந்தார். யாழ் மண்ணில் ‘நமது ஈழநாடு’ என்ற பத்திரிகையை ஆரம்பித்து, அப் பத்திரிகையின் நிர்வாக இயக்குநராக இருந்து அந்தப் பத்திரிகையின் வளர்ச்சிக்குப் பங்களித்தார். இவர் ஆரவாரமின்றி அமைதியாக ஆற்றிய மக்கள்பணி அளப்பரியது. அச கைக்கூலிகளாகச் செயற்பட்ட ஆயுததாரிகளால் 20.08.2006 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். திரு. சின்னத்தம்பி சிவமகாராசா அவர்களின் சேவைக்கு மதிப்பளித்து, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் ‘மாமனிதர்’ என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்கியிருந்தனர்.

ஏனைய பதிவுகள்