17904 சிங்களப் பேரினவாதமெனும் பேரிருளை நீக்கவந்த பேரொளி தலைவர் பிரபாகரன்(The Revolutionary leader of the Eelam Tamils).

மா.க.ஈழவேந்தன். கனடா: மா.க.ஈழவேந்தன், 809-17, Brimley Road, Scarborough, M1M3T8, 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(36) பக்கம், விலை: கனேடிய டொலர் 5.00, அளவு: 21.5×14.5 சமீ.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் பிறந்த ஈழவேந்தன், சென் ஜோன்ஸ் கல்லூரியில் கற்றுத் தேர்ந்தவர். இலங்கை மத்திய வங்கியில் தொழில்புரிந்து வந்த வேளையில் மத்தியவங்கி தமிழ் ஊழியர்சங்கத்தைத் தொடங்கி அதன் தலைவராக விளங்கினார். பின்னர் தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சியில் இணைந்துகொண்ட இவர், காவலூர் நவரத்தினம் தமிழரசுக் கட்சியுடன் கொண்ட கருத்து முரண்பாடு காரணமாகத் தமிழர் சுயாட்சிக் கட்சியை உருவாக்கியபோது அதில் தன்னையும் இணைத்துக்கொண்டவர். பின்னர் ஆயுதப் போராட்டக் குழுவான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் சேர்ந்து திம்புப் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்துகொண்டார். இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து வெளியேறியபோது காசி ஆனந்தன் போன்றோருடன் இந்தியாவுக்குச் சென்று தமிழகத்தில்  தங்கியிருந்து அரசியல்பணிகளில் ஈடுபட்டவர். அங்கிருந்து பின்னர் இந்திய அரசினால் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர். பின்னர் இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டபோது நியமனப் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரரானவர். இத்தகைய அரசியல் பின்புலத்தில் உருவாகிய ஈழவேந்தனின் கடிதங்கள், உரைகள், கட்டுரைகள் என்பனவற்றின் தொகுப்பாக தமிழ்த் தேசியத்தின் பாதையில் ஈழவேந்தனின் பதிவுகள் என்ற தலைப்பில் மார்கழி 2007இல் ஒரு நூல் வெளிவந்துள்ளது. அதனை நாகலிங்கம் ஞானசேகரம் அவர்கள் கனடாவிலிருந்து பதிப்பித்து வெளியிட்டிருந்தார். ஈழவேந்தனின் 50 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையின் பதிவாகவும், ஈழத்து அரசியல் போக்கின் ஒரு காலகட்ட வரலாற்றை உள்ளிருந்து பார்க்கும் ஒரு பார்வையாகவும் அந்தத் தொகுப்பு நூல் அமைந்திருந்தது. அதில் காணப்பட்ட ஒரு கட்டுரையின் மீள்பதிப்பு இந்நூலாகும். இந்நூலின் முதல் 20 பக்கங்களில் அக்கட்டுரை தமிழ் மொழியிலும், இறுதி 16 பக்கங்கள் ஆங்கிலமொழியிலும் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்