மலர் வெளியீட்டுக் குழு. லண்டன்: அமரர் அமுதசாகரன் அடைக்கலமுத்து குடும்பத்தினர், 2012. (யாழ்ப்பாணம்: ஜெயா பிரின்டர்ஸ், 100, நான்காவது குறுக்குத் தெரு).
56 பக்கம், ஒளிப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 20.5×14.5 சமீ.
நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செவாலியர் ச.அமுதசாகரன் அடைக்கமுத்து (அமுதுப் புலவர்) அவர்களின் இறைபதப்பேறு (23.02.2010) குறித்த இரண்டாம் ஆண்டு நினைவு மலர். யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், இளவாலைக் கிராமத்தை வாழ்விடமாகவும் கொண்டவர் அமுதுப் புலவர். இளவாலை தம்பிமுத்து-சேதுப்பிள்ளை தம்பதியினரின் மகனாக 1918ம் ஆண்டு செப்டெம்பர் 14ம் திகதி பிறந்த இவர், தன் ஆரம்பக் கல்வியை புனித சார்ள்ஸ் வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், உயர் கல்வியை கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டவர். யாழ்ப்பாணம் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும் தமிழ்த்துறைப் பண்டிதர் வகுப்பில் பயின்றிருந்த இளவாலை அமுது, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வித்துவான் பட்டத்தையும், இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றவர். ஓய்வுபெற்ற முதலாம் தர ஆசிரியரான இவர், இளவாலை அமுது என்று ஈழத்துத் தமிழ்; இலக்கிய உலகில் பரவலாக அறிமுகமானவர். 1984ம் ஆண்டு முதல் தாயகத்திலிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வந்து லண்டன் மிடில்செக்ஸ் பிரதேசத்திலுள்ள ஹரோ நகரின் நோர்த்ஹோல்ட் பகுதியில் தான் மரணிக்கும்வரை வாழ்ந்துவந்தார். அமுதுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டினைக் கௌரவிக்கும் வகையில் பல்வேறு அறிவுசார் நிறுவனங்களும் அவரைக் கௌரவித்திருக்கின்றன. இவரின் சமய இலக்கியத் தொண்டினை கௌரவித்து 2004ம் ஆண்டில் ரோமாபுரியில் பரிசுத்த பாப்பரசரினால் செவாலியர் விருது வழங்கப்பட்டது. பின்னர் 2005இல் இலங்கை அரசு கலாபூஷணம் விருதையும் அமுதுப் புலவருக்கு வழங்கியிருந்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொளரவ இலக்கிய கலாநிதிப் பட்டத்தையும் அதே ஆண்டில் வழங்கியிருந்தது. 2006இல் கனடாவிலிருந்து தமிழர் தகவல் நிறுவனம், தமிழர் தகவல் விருதினையும் வழங்கியிருந்தது.