செல்வம் அருளானந்தம்;. நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வதுபதிப்பு, டிசம்பர் 2022. (சென்னை 600 077: மணி ஓப்செட்).
248 பக்கம், விலை: இந்திய ரூபா 290., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-5523-272-4.
கனடாவிலிருந்து ‘காலம்’ செல்வம் எனும் செல்வம் அருளானந்தம் எழுதியுள்ள பனிவிழும் பனைவனம், ஒரு அனுபவப் புனைவாக வெளிவந்துள்ளது. ‘இந்த எழுத்து துன்பமும் இன்பமும் வலியும் பகிடியும் நிறைந்த ஒரு நினைவு கூரல்’ என நூலுக்கான முன்னுரையில் சச்சிதானந்தன் சுகிர்தராஜா குறிப்பிடுகின்றார். படிக்கும் போது சிரிப்பையும், நூலை வாசித்து முடிக்கும் போது கண்ணீரையும் வரவழைத்த அசலான இந்த எழுத்து, யாழ்ப்பாணத்தைக் கொண்டாடுகின்ற வகையில் எழுதப்பட்டுள்ளது. யாழ் மண்ணின் அரசியல் மாற்றங்கள், பண்பாட்டு நினைவுகள், மற்றும் மறக்கமுடியாத மனிதர்களின் வாழ்க்கையை மிக நுண்மையாகச் சித்தரித்துள்ளது. வரலாற்று நிகழ்வுகள் ஒரு சாமானிய மனிதனை எப்படிப் பாதிக்கிறது. அவன் என்னவாக மாறுகிறான் என்பதை மிக நேர்மையாகச் செல்வம் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். யாழ்ப்பாண மாவட்டத்தின் சில்லாலைக் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வம் அருளானந்தம் பின்னாளில் புலம்பெயர்ந்து கனடாவுக்குச் சென்று அங்கே நீண்ட காலமாக வாழ்பவர். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக அங்கு இலக்கியச் சந்திப்புகளையும் கருத்தரங்ககளையும் நடத்தி வருகிறார். 1992இல் இவரது ‘கட்டிடக் காட்டுக்குள்’ கவிதைத் தொகுதி வெளிவந்தது. ‘சொற்களில் சுழலும் உலகம்’ ஆசிரியரின் அனுபவப் பதிவாக 2019இல் வெளிவந்தது. ‘எழுதித் தீராப் பக்கங்கள்’ 2016இல் முதற்பதிப்பும், 2021இல் இரண்டாவது பதிப்பும் கண்டது.