தமிழகன் (இயற்பெயர்: இராமச்சந்திரன்). தமிழ்நாடு: அங்குசம் வெளியீடு, பிளாட் எண் 4, தங்கம் நகர், திருநகர், பொன்மலை, திருச்சிராப்பள்ளி 620004, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).
160 பக்கம், விலை: ரூபா 450., இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ.
மலையகம் 200 என்ற முழக்கத்துடன் இருநூறு ஆண்டுக்காலத் துயரத்தைப் பேசிக்கொண்டிருக்கின்ற ஒரு தருணத்தில் அந்த மலையகத்தில் பிறந்து, இரண்டாகத் துண்டாடப்பட்டு சிறிமா-சாஸ்திரி உடன்படிக்கை (1964) மூலம் தமிழகத்தில் தூக்கி வீசப்பட்ட இலட்சக் கணக்கான மக்களில் ஒருவனாக இந்நூலாசிரியர் தன் கதையை எழுதியுள்ளார். நாடுகள் தங்களுக்கிடையே செய்துகொள்கிற ஒப்பந்தங்களில் இரத்தமும் சதையுமாய் மனித ஜீவன்கள் எப்படி நசிந்து மாய்கிறார்கள் என்பதற்கு நல்ல சாட்சியமாய் தமிழகனின் சுயசரிதை அமைகின்றது. களு கங்கைக் கரையில் பிறந்து காவிரிக் கரையில் தொடரும் இந்த 62 ஆண்டு கால வாழ்க்கையைக் கடந்து வந்த கதையே இது. ஒரு தனி மனிதனின் கதையாக அமையாமல் எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, அடையாளமின்றிக் கிடக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் சிறு கண்ணீர் துளிதான் இக்கதை. ஒரு சாமானியனின் கதை. வாழ்க்கையின் அதல பாதாளத்தில் உழன்றவனின் கதை. ஆண்டி என்ற ஆளுமை மிக்க தோட்டத்தொழிலாளியின் பதினொரு பிள்ளைகளில் ஒருவராய் மிகப் பின்தங்கிய தோட்டப்புறச் சூழலிலே, கல்வி வசதி எதுவுமற்ற பிராந்தியத்தில் வாழ்வை ஆரம்பித்த மலையகத்தின் இளங்குழந்தையொன்றின் வாழ்வு என்னென்ன சவால்களை எல்லாம் சந்தித்தது என்பதை இந்தச் சரிதை பேசுகின்றது.