எம்.எம்.அபுல் கலாம். கொழும்பு 9: எம்.எம்.எம்.ஷபீக்குல் அமீன், இல. 21, சீலரத்ன ஒழுங்கை, ஆரம்ய வீதி, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xviii, 247 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-93967-0-8.
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ‘நாட்டு நலனில் நம்மவரின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் 1986/87 காலப்பகுதியில் சுமார் 60 வாரங்கள் ஒலிபரப்பான உரைத்தொடரின் செம்மைப்படுத்தப்பட்ட அச்சுவடிவமே இந்நூலாகும். முஸ்லிம்கள் இலங்கைக்கு வர்த்தகர்களாகவே வந்தனர். ஆக்கிரமிப்பாளர்களாக வரவில்லை என்று வரலாற்றாய்வாளர்கள் கூறுவர். முஸ்லிம்களுக்கெதிரான அரசியல் பகைப்புலச் சூழலில் இந்நூல் அதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. ஐரோப்பியர்கள் இலங்கையை காலனித்துவ ஆதிக்கம் செய்ய வந்தார்கள். ஆனால் அவர்களுக்கு முன்பே வந்துவிட்ட முஸ்லிம் முன்னோர்கள் இலங்கையின் இறையாண்மையை மதித்து நடந்தார்கள். தமது கடல்கடந்த வர்த்தக நடவடிக்கைகள் மூலம் இலங்கையை மேம்படுத்தினார்கள். இந்த ஆய்வுநூல் இதை நிரூபிக்கின்றது. வரலாற்றுக் காலங்கள், முஸ்லிம்களின் வருகையும் வாணிப வளர்ச்சியும், இலங்கையில் இட விளக்கவியற் படத்தை தயாரிப்பதில் முஸ்லிம் முன்னோர்களின் வகிபாகம், காலித் துறைமுகத்தின் முக்கியத்துவம், அக்கபோதி மன்னரும் முஸ்லிம்களும், இலங்கைத்தீவின் முக்கியத்துவத்தில் முஸ்லிம் கப்பலோட்டிகளின் பங்கு, ‘மரக்கல மினிஸ்சு’ என்னும் முஸ்லிம் கடலோடிகள், மார்க்கோபோலோவும் இப்னு பதூதாவும் தரும் வரலாற்றுக் குறிப்புகள், மொரோக்கோ நாட்டு கடலோடி இப்னு பதூதாவின் இலங்கை வருகை, முஸ்லிம்களும் முக்குவர்களும், சட்டத்துறையில் முஸ்லிம் முன்னோர்கள், முதலாம் புவனேகபாகு மன்னனும் முஸ்லிம்களின் தேசப் பங்களிப்பும், சிங்கள மன்னர் பரம்பரையில் வந்த முஸ்லிம் வாரிசு, பௌத்தவாதமும் முஸ்லிம் மன்னரின் கொலையும், இந்திய-இலங்கை முஸ்லிம் உறவும் தேசிய வரி செலுத்தலும், குடியேற்றமும் பண்பாட்டுப் பேணுகையும், நெசவுத்துறைக்கு முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்பு, கறுவாச் செய்கையில் முஸ்லிம் முன்னோடிகள், மருத்துவத்துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பு, மன்னர்களின் பாராட்டைப் பெற்ற முஸ்லிம் வைத்திய முன்னோடிகள், வெளிநாட்டு ஆட்சியாளர்கள் நலன் பேணிய முஸ்லிம் மருத்துவர் பெற்ற கௌரவம், நோயியற் கூறுகளை முதலில் அடையாளப்படுத்திய முஸ்லிம் முன்னோர்கள், இப்னு ஸீனாவின் பௌதிகவியல் கொள்கையும் சிறப்புகளும், இரத்தினக் கற்கள் மூலம் அரபு மக்களை கவர்ந்த இலங்கை மன்னர்கள், முஸ்லிம் தொடர்பை நினைவுகூரும் கூபிக் கல்வெட்டு, இரத்தினக்கல் வியாபாரத்தில் தனியுடைமையாளர்களாக விளங்கிய முஸ்லிம் முன்னோர்கள், உள்நாட்டு நீர்வழி, தரைவழி வர்த்தகப் போக்குவரத்தில் முஸ்லிம்களின் பங்கு, தேசியக் கொடிக்கு வித்திடும் வகையில் சிங்கக் கொடியை வழங்கிய மூதாதையர், ஒல்லாந்தர் பிரவேசமும் முஸ்லிம்களின் நிலைப்பாடும், பாதுகாப்புத் துறைக்கு பங்களிப்புச் செய்த மலாயரும் அவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியும், முஸ்லிம்களுக்கெதிரான கெடுபிடிகளைத் தளர்த்திய ஒல்லாந்த ஆட்சியாளர், கண்டிப்புகளின் மத்தியிலும் கடமையுணர்வு காத்த முஸ்லிம் முன்னோர்கள், முஸ்லிம் தடயமழிக்கப்பட்ட கல்வெட்டுகளை வெளிக்கொணர்ந்த ஆங்கிலேயர், தேச விடுதலைக்கான முஸ்லிம்களின் பங்களிப்பு, முஸ்லிம் சமூகத்தை வழிநடத்துவதில் விதேச முஸ்லிம் தலைவர்களின் வகிபாகம், பேராதனை தாவரவியற் பூங்கா உருவாக உதவிய முஸ்லிம் முன்னோர்களின் அறிக்கை, முஸ்லிம்களது ஆள்சார் சட்டத்தை வகுப்பதில் பிரித்தானியருக்குத் துணையாக இருந்த முஸ்லிம் முன்னோர், முஸ்லிம்களின் திருமண விவகாரங்களுக்காக தனித்துவமான காதி நீதிமன்ற நீதிபதிகளின் நியமனம், வாப்புச்சி மரிக்காரின் செல்வங்களும் சமூகப் பங்களிப்பும், தாம் பெற்ற வெகுமதியை சகோதர முஸ்லிம்களின் நலனுக்காக அர்ப்பணித்த விசித்திர மனிதர், முஸ்லிம் சமூகத்தின் கல்வி எழுச்சிக்கு வித்திட்ட இரு பெரும் பிரமுகர்கள் ஆகிய 56 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் மருதமுனையில் பிறந்து வளர்ந்தவர். கல்முனை ஸாஹிறா கல்லூரியிலிருந்து முதல் தடவை 1980இல் கொழும்பு பல்கலைக்கழக பீடத்திற்குச் சென்ற நால்வரில் இவரும் ஒருவர். இவர் உயர் நீதிமன்ற சிரேஷ்ட சட்டத்தரணியாகப் பணியாற்றுகின்றார்.