எம்.வாமதேவன் (மூலம்), பொன்.இராமதாஸ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 8: எம்.வாமதேவன், BQ 2/2, மெனிங் டவுண், மங்கலா வீதி, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xx, 126 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-93210-0-7.
மலையகத்தின் மூத்த கல்விமான், முன்னாள் அமைச்சு செயலாளர், நிதி ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.வாமதேவன் எழுதியுள்ள இந்நூல், திட்டமிடல்துறையில் ஆசிரியருக்கு இருக்கும் வளமான அனுபவத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. இரு நூற்றாண்டு காலப்பகுதியில் ஏறக்குறைய 180 ஆண்டுகள் அல்லது 90 சதவீதமான காலப்பகுதியில் தமது அரசியல் இருப்புநிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே மலையகத் தமிழர் சமூகம் போராடி வந்திருக்கிறது என்றும் அதன் காரணமாக நாட்டின் அபிவிருத்திச் செயன்முறைகளின் பலன்களை அவர்களால் அனுபவிக்க முடியாமல் போய்விட்டது என்றும் கூறும் வாமதேவன் அதிகாரப் பரவலாக்கலில் இந்தச் சமூகத்தின் அரசியல் அடையாளம் அங்கீகரிக்கப்படுவதும் பொருளாதார ரீதியாகத் தோட்ட உற்பத்தி முறையில் இருந்து விடுபடுவதும் அவற்றின் ஊடாக அனைத்து உரிமைகளையும் முழுமையாக அனுபவிப்பதுமே ஏனைய சமூகங்களோடு சமத்துவ நிலையை எட்டுவதற்கான வழியாகும் என்ற தனது நிலைப்பாட்டைத் தெளிவாக முன்வைக்கிறார். சமூகம், பொருளாதாரம், வரலாறு ஆகிய மூன்று பிரிவுகளில் மலையக மக்களின் எதிர்பார்ப்புகள், மலையகத் தமிழர்களின் சமூக மேம்பாட்டிற்கான திட்ட முயற்சிகளும் பொருத்தமான நடைமுறைப்படுத்தல் பொறிமுறையின் தேவையும், தமிழ்நாட்டில் இலங்கையின் தாயகம் திரும்பியோர் புனர்வாழ்வும் சவால்களும்: ஒரு மீள்பார்வை, தோட்டத்துறையின் உருவாக்கமும் இந்தியத் தமிழரும், மலையக மக்களின் நிலவுரிமையில் தோட்ட பொருளாதார அமைப்பின் தாக்கம், தோட்டத் தொழிலாளர்கள் சிற்றுடைமையாளர்களாக, மு.சி.கந்தையாவின் ‘சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்’, இரா.சடகோபனின் ‘வலி சுமந்த வரலாறு’, ஏ.பி.கணபதிப்பிள்ளை நூலை ஒட்டிய மலையகப் போராட்டங்கள் குறித்த ஒரு பார்வை, மலையகம்-நேற்று, இன்று, நாளை: ஒரு வரலாற்று அரசியல் சமூக நோக்கு, ராஜன் ஹுல் மற்றும் கிருபைமலரின் ‘இறந்து பிறந்த ஜனநாயகம்’ ஆகிய 11 கட்டுரைகளின் வாயிலாக இதனை மேற்கொள்கின்றார்.