17966 அப்பு ஆச்சி ஆண்ட மண்ணில்.

ந.பரமேஸ்வரன். யாழ்ப்பாணம்: கீரிமலை நவரத்தின ஐயர் இராசேஸ்வரி தம்பதிகளின் ஞாபகார்த்த வெளியீடு, 40/2, மாரியம்மன் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2006. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(6), 44 பக்கம், ஒளிப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இலங்கையின் ஆக்கிரமிப்பு இராணுவத்தால் விழுங்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் 16 வீதமான நிலப்பரப்பு வெறுமனே இன்னொரு நிலப்பரப்பினால் ஈடுசெய்துவிடமுடியாதது. வலிகாமம் வடக்கு தமிழர் மண்ணின் இதயம் போன்றது. உணர்வுடன் கலந்தது. கீரிமலை, ஈழத்தின் சைவர்களின் இதயபூமி. இந்தப் பின்புலத்தில் நின்று, வலிகாமம் வடக்கின் சமூக பொருளாதார வாழ்வியல் அம்சங்களை இச்சிறுநூல் ஓரளவு ஆவணப்படுத்த முன்வந்துள்ளது. அதில் குறிப்பாக வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் நூலாசிரியர் பரமேஸ்வரனின் பாரம்பரிய வாழ்விடமான கீரிமலைவாழ் மூதாதையர் வாழ்ந்துசென்ற வாழ்வியல் பற்றிய ஏக்கமும் இந்நூலின் இதயநாதமாகின்றது. பரமேஸ்வரனின் நினைவுகளை ஆக்கிரமிக்கும் சிதம்பரப்பிள்ளை ஐயாவின் உடுக்கடி முதல் காங்கேசன்துறை சீமெந்து ஆலையின் சங்கொலி வரை, பள்ளிக்கூட வேளையில் திரைப்படம் பார்க்கப் போன மாணவனை ராசநாயகி தியேட்டர் வரை தேடிச்சென்ற பாடசாலை அதிபர் கனகசபாபதி பற்றியும், அந்தியேட்டி ‘பக்தர்களுக்காக’ காத்திருக்கும் நகுலேஸ்வரம், மாவிட்டபுரம் ஆலயங்கள், கிராமத்து வைரவர் கோயில் திருவிழாக்கள் எனத் தன் பிரதேச வரலாற்றுக் கூறுகளை மீளநினைந்து பதிவுசெய்துள்ளார். தனது பெற்றோரின் ஞாபகார்த்தமாக இந்நூலை ஆசிரியர் வெளியிட்டுள்ளார். இக்கட்டுரைத் தொடர், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்து பாராட்டுப் பெற்றிருந்தது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53854).

ஏனைய பதிவுகள்

17063 கொழும்புத் தமிழ்ச்சங்கம்: 68ஆவது ஆண்டு அறிக்கை (2009-2010).

கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு. கொழும்பு 6: சங்கப் பணிமனை, கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை). 42 பக்கம், விலை: