சுப்பிரமணியம் புத்திசிகாமணி, ஜெயசோதி புத்திசிகாமணி. கிளிநொச்சி: காவேரி கலா மன்றம், 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: மெகா பிரிண்டர்ஸ், கச்சேரியடி).
xiv, 176 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
உடுத்துறைக் கிராமமானது, யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் யாழ்ப்பாண மாநகருக்கு தென்கிழக்கே 45 கிலோ மீற்றர் தூரத்தில் பளை என்ற இடத்திலிருந்து 13 கி.மீ. தென் கிழக்கிலும், பருத்தித்துறையிலிருந்து 32 கி.மீ. தெற்கேயும், ஆனையிரவிலிருந்து 10 கி.மி. வடகிழக்கிலும் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இது அண்ணளவாக மூன்று சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்டது. இக்கிராமத்தைப் பற்றியும் கிராமத்து மண்ணின் மைந்தர்கள் பற்றியும் பதிவுசெய்யும் இந்நூல் ஒரு ஊரின் வேர்கள், உழைப்பின் உயர்வுகள், கிழக்கின் உதயம், கலங்கரை விளக்கு, உலகின் ஒளி, சனாதன தர்மம், மரபுகளின் வேர்கள், சாதனைப் பூக்கள், இயற்கையின் கோபம், கொடுக்குளாய் கொடியின் வேர்கள் ஆகிய பத்து இயல்களைக் கொண்டது. எழுத்தாளரும், கவிஞரும், பத்திரிகை ஆசிரியரும், சமூகத் தொண்டருமான விடிவெள்ளி க.பே.முத்தையா அவர்களது நூற்றாண்டு விழாவையொட்டி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. க.பே.முத்தையா, (1914.08.31 – 1964.05.26) நல்லூர் சாதனா பாடசாலையில் தலைமையாசிரியராக இருந்த காலத்தில் தனது ஐம்பதாவது வயதில் காலமானார். இவர் யாழ். மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாச வெளியீடான ‘சமூகத்தொண்டன்’ மாத இதழுக்கு ஆசிரியராக இருந்து செயற்பட்டதோடு 1948-1954 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி தமிழ்ப் பாடசாலை தலைமையாசிரியராகவும் பணியாற்றினார். இவர் ‘சமூகத்தொண்டன்’ மாத இதழின் மூலம் பல இளம் எழுத்தாளர்களை இனங்கண்டு இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியதுடன் பல பேச்சாளர்களையும் உருவாக்கினார். இவர் உடுத்துறை திருச்சபையின் ‘விசித்திர சரித்திரம்’, ‘பாலர் நேசன்’ ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் விளங்கினார். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66621).