17968 எமது கிராமங்களும் அவற்றைச் செதுக்கிய சிற்பிகளும்: பாகம் 1.

வே. விவேகானந்தன். சுவிட்சர்லாந்து: பாலர் ஞானோதய சங்கம், சுவிட்சர்லாந்து கிளை, இணை வெளியீடு, பிரித்தானியா: பாலர் ஞானோதய சங்கம், பிரித்தானியக் கிளை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (அச்சக விபரம் தரப்படவில்லை).

ii, 164 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

தான் சார்ந்த தாய்மண்ணின் பெயரை உலகறியச்செய்த அந்த மண்ணின் மக்களை, அவர்களது வாழ்வியல் பணிகளை ஆவணப்படுத்தும் முயற்சியாக கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் வே. விவேகானந்தன் இந்நூலை எழுதி வழங்கியுள்ளார். இந்நூலில் கட்டுவன், வறுத்தலைவிளான், மயிலிட்டி தெற்கு அகிய கிராமங்களின் வரலாறும் அம்மண்ணின் மக்களும் மீள்பார்வைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நூலின் உருவாக்கத்திற்கு கால்கோளாக அமைந்திருப்பது 1922ஆம் ஆண்டு தொடக்கப்பெற்ற ‘பாலர் ஞானோதய சங்கம்’ என்ற அமைப்பாகும். கட்டுவன், மயிலிட்டி ஆகிய கிராமங்கள் பண்டைய யாழ்ப்பாணத்தில் கந்தரோடை அரச மையமாக இருந்த காலத்திலிருந்தே வந்திருக்கின்றன. இந்நூலின் முதல் பதின்மூன்று அத்தியாயங்களில், அறிமுகம், அமைவிடம், வரலாற்றுப் பின்னணி, கட்டுவன் சந்தி, பாலர் ஞானோதய சங்கம், கல்விப் பாரம்பரியம், சைவசமயப் பாரம்பரியம், கலை கலாசாரப் பாரம்பரியம்,  விளையாட்டு முயற்சிகள், நிலவளமும் நீர்வளமும், போக்குவரத்துச் சாதனங்களும் சேவைகளும், மயிலிட்டி கிராமசபை, அரச தனியார் சேவைகள் ஆகிய வரலாற்றுத் தகவல்கள் இடமகுயஉநடிழழம நவெசல18.01.2024 பெற்றுள்ளன. பதினான்காவது அத்தியாயம் கட்டுவன், மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிளான் ஆகிய முக்கிய கிராமங்களையும் பல்வேறு வழிகளிலும் வளப்படுத்திய 28 சான்றோர்கள் பற்றியதாகும். ‘கட்டுவனூரை செதுக்கிய சிற்பிகள்’  என்ற தலைப்பில் அம்பலம் பொன்னையா, தம்பிப்பிள்ளை பொன்னம்மா, கதிர்காமர் ஆறுப்பிள்ளை, சின்னக்குட்டி கந்தவனம், க.பொன்னம்பலம்-க.நாகலிங்கம் சகோதரர்கள், வித்துவசிரோமணி சி.கணேசையர், பண்டிதர் இ.நமசிவாய தேசிகர், இ.தாமோதரம்பிள்ளை, த.சிவக்கொழுந்தர், பண்டிதர் வ.முத்துக்குமாரு, சீ.விஜயசுந்தரம், க.சிவபாதசுந்தரக் குருக்கள், அனு.வை.நாகராஜன், பேராசிரியர் சு.சுசீந்திரராஜா, நல்லதம்பி நாகலிங்கம், வல்லிபுரம் குருசாமி, எஸ்.கே.பரராஜசிங்கம், த.துரைச்சாமி, சி.கனகசபை, இளையதம்பி சின்னத்துரை (பத்தாயிரம் சின்னத்துரை), கந்தையா சின்னப்பு, சின்னையா நாகலிங்கம், சின்னத்தம்பி அருணாசலம், சின்னத்தம்பி இராசரத்தினம், கவிஞர் க.திருமாவளவன், பேராசிரியர் ச.விநாயகமூர்த்தி, பொன்னையா பாலசிங்கம், பேராசிரியர் நா.சண்முகலிங்கம் ஆகியோர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் இந்நூலில் புகைப்படங்களுடன் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்