சி.பத்மநாதன். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, சங்கம் ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 13: தேவி அச்சகம், 529/9, கே.சிறில் சி.பெரேரா மாவத்தை).
xxiv, 308 பக்கம், ஒளிப்படங்கள், விலை: ரூபா 1500., அளவு: 25×18 சமீ., ISBN: 978-624-6036-03-4.
இந்நூலில் யாழ்ப்பாணம், தீவுப்பற்று என்பவற்றின் பூர்வகுடிகள் தமிழ் பேசும் நாகர் என்பதும் அவர்களின் சாதனைகள் அங்கு உருவான சமூக உற்பத்தி முறை, சமூக பண்பாட்டு வழமைகள் என்பனவற்றிற்கு அடிப்படையானவை என்பதும் தகுந்த ஆதாரங்களோடு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மறந்துபோன வரலாறொன்று இந்நூலின் வாயிலாக மீண்டும் பிரகாசிக்கின்றது. இந்நூலில் ‘நாகரும் தமிழ்மொழியும்’ (இலங்கையில் ஆதி இரும்பக் காலம், இயக்கரும் நாகரும், தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள், நாகநாடு: வாழ்வும் வளமும்), ‘நாகரின் குடியிருப்புகளும் கட்டுமானங்களும்’ (ஆனைக்கோட்டை முதல் வட்டுக்கோட்டை வரையுள்ள நாகரின் பண்பாட்டுச் சின்னங்கள், வடமராட்சியில் நாகர், தென்மராட்சியில் நாகரின் கோயில்கள், தீவுப்பற்றின் புராதனகாலக் குடியிருப்புகள், கந்தரோடையில் நகரமயமாக்கம்), ‘சமய வழிபாடுகளும் சின்னங்களும்’ (நாக வழிபாடு, சைவசமய சின்னங்களும் கோயில்களும், பௌத்தம், வல்லிபுரத்திற் பௌத்த சமயம்: சிவிராயனும் ணாகதிவும்), ‘நாணயங்களும் பாவனைப் பொருட்களும்’ (நாகர் காலத்து நாணயங்கள், பாவனைப் பொருட்கள்) ஆகிய நான்கு பகுதிகளில் பதினாறு கட்டுரைகளை தொகுத்தும் வகுத்தும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வீரகேசரி வார வெளியீட்டில் ஒராண்டு காலம் முழுவதும் இடையறாது வெளிவந்த கட்டுரைகள் இதற்கு அடிப்படையானவையாக அமைந்துள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பேராசிரியரான சி.பத்மநாதன் 2014 முதல் இன்று வரை யாழ்ப்பாணத்துப் பல்கலைக்கழகத்து வேந்தராக பதவிவகித்து வருகிறார்.