பா.இரகுவரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
48 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×12.5 சமீ., ISBN: 978-955-0958-82-5.
ஒரு கிராமத்தின் வாழ்வென்பது அக்கிராமத்தில் வாழ்ந்த மனிதர்களாலேயே பேணப்படுவதும் முன்னெடுத்துச் செல்லப்படுவதுமாகும். தொண்டைமானாற்றைப் பொறுத்தவரையில் மரபுரிமைச் சொத்துக்கள் எனக் கூறக்கூடிய அளவில் ஏராளமான வரலாற்று வாழ்வியல் எச்சங்கள் இருந்தன. அவை கடந்தகால யுத்தங்களாலும், பின்னர் மக்களின் அக்கறையின்மையாலும், அபிவிருத்தி என்ற பெயராலும் அழிக்கப்பட்டுள்ளன. இன்றும் கூட எம் கண்ணெதிரிலேயே அழிக்கப்படும் சொத்துக்களைப் பற்றி எந்தவொரு கேள்வியும் எழுப்பாமல் வாயில்லாப் பூச்சிகளாய் இருக்கின்றோம். இந்த நிலையில் அன்றைய தொண்டைமானாற்றைப் புரிந்துகொள்வதற்கும் பருமட்டான ஒரு சமூக வரலாற்று வரைபடத்தைக் கொடுப்பதற்கும் இந்நூல் முனைகின்றது. தொண்டைமானாறு: அறிமுகம், அமைவு, தொண்டைமானாறு பகுதி தொடர்பான ஆரம்பகால வரலாறும் தொண்டைமானாறு என்ற பெயர்க் காரணமும், கருணாகரத் தொண்டைமான் பற்றிய மேலதிகக் குறிப்புகள், தொண்டைமானாறு சந்திப்பகுதி, தொண்டைமானாறு சந்திப் பகுதியின் தெற்காக அமைந்துள்ள முக்கியமான பகுதிகள் (கோணேசர் கோயில், ஆதிவைரவர் கோயில், தொண்டைமானாறு யுத்தகளம்), சினுமகாப்பிள்ளை (1620), தொண்டைமானாறு வீதியின் பாலங்களும் அதற்கு முந்திய நிலைமையும், பாலம் அமைப்பதற்கு முந்திய நிலைமை, தட்டி பஸ் மரப்பாலத்தைக் கடத்தல் அனுபவம், சீமெந்துப் பாலம், இரும்புப் பாலம், பெரிய கடற்கரை-சின்னக்கடற்கரை, தொண்டைமானாற்றுக் கிணறுகள், தொண்டைமானாற்றில் இருந்து கப்பல் போக்குவரத்து மற்றும் தகவல்கள், படைத்தளமாக விளங்கிய தொண்டைமானாற்றுக் கிராமத்தின் காணிப் பெயர்கள், தொண்டைமானாறு மேலும் சில தகவல்கள் (வீரமாகாளி கோவில், பிரமர் குளம், தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம், நீச்சல் வீரர் திரு. மு.நவரத்தினசாமி, செல்வச்சந்நிதி முருகன் கோவில் தோற்றம், சித்தர்கள் யோகிகள், பறை வாத்தியம், காவடி, ஆட்டக்காவடி, செல்வச்சந்நிதி பற்றிய நூல்கள், தொண்டைமானாறு சித்த ஆயுள்வேத வைத்திய பரம்பரையினரும் ஆண்டியப்பர் பரியாரியாரும், தொண்டைமானாறு நன்னீரேரித் திட்டம், தொண்டைமானாறு வெளிக்கள நிலையம், முடிவுரை என பல்வேறு தலைப்புகளினூடாக இந்நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 391ஆவது நூலாக வெளிவந்துள்ளது.