எம்.வாமதேவன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு: அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xvi, 260 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
தோட்டத்துறைக்கான முதலாவது தொழிலாளர் தொகுதியை தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவந்தமையைக் குறிக்கின்ற ஆண்டாக 1823 கருதப்பட்டு, 2023ஆம் ஆண்டு ‘மலையகம் 200’ என்ற தொனிப்பொருளில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும், லண்டன் உள்ளிட்ட புகலிட நாடுகளிலும் நினைவுகூரப்பட்டது. இந்நிகழ்வுகளின் மொத்த விளைவாக மலையக மக்களின் 200 வருடகால துன்பங்கள், துயரங்கள் வலிகள், வேதனைகள் வெளிக்கொணரப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இதற்கு அப்பால் என்ன? என்கின்ற வினாவுக்கான விடையாக ‘இர. சிவலிங்கம் நினைவுக் குழு’ வால் வெளியிடப்படும் இந்நூல் அமைகின்றது. ‘மலையகம் 200க்கு அப்பால்’ என்னும் இந்நூல் கல்வி, நிலம் மற்றும் வீட்டுரிமை, பெண்ணுரிமை, பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டுள்ளது. மலையகப் பாடசாலைக் கல்வி (பொன். இராமதாஸ்), இலங்கை அரசுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மலையகத் தமிழ் மாணவர்கள் எதிர்கொள்ளும் நிதிசார் பிரச்சினைகளும் சவால்களும் (எஸ்.கருணாகரன்), இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் கற்றல்: இலங்கையில் மலையகக் கல்வியை மையமாகக் கொண்ட கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் (எஸ்.கே.நவரட்ணராஜா), தோட்டத் தொழிலாளர்கள் சிற்றுடைமையாளர்களாக நிலைமாறுதல்: சாத்தியங்களும் சவால்களும் (எம்.வாமதேவன்), மலையக சமூகத்திற்கான வீட்டுரிமைகள்- கடந்தகால சவால்கள் மற்றும் எதிர்கால நோக்கு (ஏ.சீ.ஆர்.ஜோன்), இலங்கையின் மலையக பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள்: விளிம்புநிலை சமூகங்களுக்குள் காணப்படும் போராட்டங்களை வெளிப்படுத்தல் தொடர்பான ஒரு பார்வை (திருமதி புளோரிடா சிமியோன்), நவீன அடிமைமுறை: மலையகப் பெண்களின் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பான நோக்கு (லெட்சுமணன் கமலேஸ்வரி), தேயிலைப் பெருந்தோட்டத்துறையில் வேலை வாய்ப்புகள்: நுவரெலியா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட தேயிலைத் தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு (ஏ.எஸ்.சந்திரபோஸ்), வடக்குவாழ் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் (பெ.முத்துலிங்கம்), மலையக தமிழ் மக்களின் இன அடையாளம் (இரா.சடகோபன்) ஆகிய பத்து கட்டுரைகளை உள்ளடக்குகின்றது.