ந.பரமேஸ்வரன். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் அலகு, கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 2023. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
74 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-624-5911-22-6.
யாழ்ப்பாண மாவட்டத்தின் நிர்வாக முறையின் பண்டைய காலத்து ஆட்சிமுறையினைப் பலரும் அறியக்கூடியவகையில் ந.பரமேஸ்வரன் இந்நூலை எழுதிவழங்கியுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தின் பண்டைய நிர்வாக முறைமையும் அது அமைந்திருந்த கட்டிட அமைப்பும் யாழ்ப்பாண மாவட்டத்தின் சிறப்புமிகு தொன்மை அடையாளமாகத் திகழ்ந்து வருவதனை நாம் அறிவோம். இந்தக் கட்டிடத்தின் வரலாற்றுப் பாதையில் யாழ்ப்பாணச் சமூகத்தின் ஒரு காலகட்ட சமூக வரலாற்று அமிசங்களும் காணப்படுகின்றன. இத்தகைய தொன்மைமிக நிர்வாக மையத்தின் வரலாற்றினைத் தேடித்தொகுத்து ஆசிரியர் எமக்கு வழங்கியுள்ளார். இலங்கையை ஒல்லாந்தர், போர்த்துக்கீசர், ஆங்கிலேயர் என ஒருவர் பின் ஒருவராக ஆண்டு வந்தனர். இவர்களது காலத்தில் மக்களுக்கான நிர்வாகப் பணிகளுக்காக தமது பாணியில் ஒரு கட்டிடத்தையும் அமைத்து நிர்வாகத்தை மேற்கொண்டு வந்தனர். அவ்வாறானதொரு மரபின் அடியாக வந்ததே இன்று தொல்லியல் அடையாளமாகத் திகழும் பழைய கச்சேரிக் கட்டிடமாகும். இன்றைய மாவட்டச் செயலகத்தின் முன்பாக இக்கட்டிடம் அமைந்துள்ளது. உதயன் பத்திரிகையின் ஆசிரியபீட ஆலோசகராகப் பணியாற்றிவரும் நவரத்தினம் பரமேஸ்வரன் முன்னர் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தனது நூலகப் பணிக்கு மேலாக ஊடகத்துறையிலும் சுயாதீன ஊடகராகப் பணியாற்றியவர். பீ.பீ.சீ, ராய்ட்டர், டெய்லி மிரர், சண்டே டைம்ஸ், உதயன், வீரகேசரி, தினக்குரல், போன்ற சர்வதேச, தேசிய ஊடகங்களின் யாழ்ப்பாணப் பிராந்தியச் செய்தியாளராகப் பணியாற்றியவர். சரிநிகர் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராகவும், இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் அரசியல் கட்டுரையாளராகவும் அறியப்பட்டவர்.