கௌரி லக்சுமிகாந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
xv, 292 பக்கம், விலை: ரூபா 2000., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-6164-19-5.
கிழக்கிலங்கைக்குத் தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு இருந்தும் தொல்லியல், வரலாற்று ஆய்வுகளில் அப்பிராந்தியம் அதிகம் கவனத்தில் கொள்ளப்படாத நிலையே நீண்டகாலமாகக் காணப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையில் இருந்து வெளிவரும் இந்நூலாசிரியரின் நூலின் வரவு முக்கியமானதாகும். கிழக்கிலங்கை, இலங்கைப் பிராமிச் சாசனங்களும் மொழியும், புராதன கிழக்கிலங்கையில் தமிழ் மொழி, புராதன கிழக்கிலங்கையின் சமய நிலை, கிழக்கிலங்கையின் சமூக நிலை, கிழக்கிலங்கையின் அரசியல் கட்டமைப்பு, புராதன கிழக்கிலங்கையின் பொருளாதார நிலைஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கிழக்கிலங்கையின் பூர்வீக வரலாற்றை எடுத்துக்கூறும் தனது ஆய்விற்கான முதன்மை மூலாதாரங்களாகப் பிராமிச் சாசனங்களையே பயன்படுத்தியுள்ள இந்நூலாசிரியர், அதற்குப் பின்புலமாக இருந்த பெருங்கற்காலப் பண்பாட்டையும் விரிவாக ஆராய்ந்திருப்பது கிழக்கிலங்கையின் தொன்மையானதும் தொடர்ச்சியானதுமான வரலாற்று வளர்ச்சி நிலைகளை எடுத்துக்கூறுவதாக அமைகின்றது. தமிழகத்தைப் போல் பெருங்கற்காலப் பண்பாட்டுடன் தமிழ் எழுத்தும், தமிழ் மொழியும் கிழக்கிலங்கையில் தோன்றியதை இந்நூல் உறுதிப்படுத்துகின்றது. திருமதி கௌரி லக்சுமிகாந்தன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் இளமாணிப் பட்டத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றவர். கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் இவர், புராதன இலங்கை வரலாறு, சாசனவியல் என்பவற்றில் ஈடுபாடு கொண்டவர்.