நந்தன வீரரத்ன (சிங்கள மூலம்), செல்லையா மனோரஞ்சன் (தமிழாக்கம்). கனடா: நாங்கள் வெளியீடு, ரொரன்டோ, 1வது பதிப்பு, ஜுலை 2024. (பதுளை: இன்டிசைன் அட்வர்டைசிங், இல. 02/12A Lower King Street).
258 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 979-8-89496-493-5.
1981 மே மாதத்தின் இறுதி நாட்கள் மாவட்ட சபைத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த பொலிசார் மீது ஒரு சிறிய தாக்குதல் நடத்தப்பட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்த சிங்கள பொலிஸாரும், இராணுவத்தினரும், கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட சிங்கள குண்டர்களும் யாழ்ப்பாணத்தை எரிக்கத் தொடங்கினர். யாழ்ப்பாணதில் உள்ள பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு தீவைக்கப்பட்டது. அருகில் இருந்த சுப்பையா மதுபானசாலை குண்டர்களால் சூறையாடப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. ‘ஈழநாடு’ பத்திரிகை அலுவலகத்திலும் தீ வைக்கப்பட்டது. யாழ் நூலகமும் எரிக்கப்பட்டது. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்று தனது அதிகாரத்தின் மூலம் பலாலி இராணுவ முகாமை விஸ்தரித்துக்கொண்டிருந்த வேளையில், யாழ்ப்பாண நகரம் எரிமூட்டப்பட்டது. இந்த அநியாயத்தை மேற்கொண்டவர்கள் அரசினால் பாதுகாக்கப்பட்டார்களேயொழிய என்றுமே சட்டத்தின் முன்னால் நிறுத்தப்படவில்லை. இந்தப் பின்புலத்தில் சிங்கள ஊடகவியலாளர் ஒருவரால் இந்நூல் உண்மையின் தேடலாக சிங்கள மக்களின் விழிப்புணர்வுக்கு தூண்டுகோலாகவும், இந்த அநியாயத்தை பின்நின்று நடத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பை ஆதாரபூர்வமாக நிரூபித்தும் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில், ‘யாழ்ப்பாணத்துக்குத் தீவைத்த ஐ.தே.க. தலைவர்கள்’ என்ற முன்னுரையுடன், துரிதமாகிய திறந்த பொருளாதார அபிவிருத்தி வேகம், யாழ்ப்பாணம் வந்த ஜுண்டா பொலிஸ் படை, தேர்தலை ஒத்திவை, யாழ்ப்பாணம் வந்த காமினி, ரணில், சிறில், பெஸ்டஸ், பொதுக்கூட்டத்தில் பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு, வன்முறைக் கும்பலாக மாறிய பொலிஸ், நூலகத்திற்குத் தீவைத்தல், ‘ஈழநாடு’ காரியாலயத்தையும் அச்சகத்தையும் தீயிடல், குருநாகல் ஜுண்டா படை வடக்கு நோக்கி, மூன்றாம் நாளாகவும் பற்றி எரிந்த தீ, தீவைப்புக்கள் சிங்களக் கண்களின் பார்வையில், சர்வஜன வாக்குரிமைக் களியாட்டத் தயாரிப்புகள், நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனம், எதிர்க்கட்சி தலைவரும் எம் பீக்களும் கைது, வாக்குக் கொள்ளை, யாழ்ப்பாண அபிவிருத்தி சபைத் தேர்தலின் தலைவிதி, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்படாத நீதி, யாழ்ப்பாணத்தில் மூட்டிய தீ எதிர்காலத்தையும் எரித்தது, புரியாப் புதிர்களின் முடிச்சவிழ்த்தல் ஆகிய 20 அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.