என்.சண்முகலிங்கன், பக்தவத்சல பாரதி. சிதம்பரம் 07: மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (சென்னை: மணிவாசகர் ஆப்செட் பிரின்டர்ஸ்).
(6), 160 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ.
இந்நூல் இந்திய இலங்கை நாடுகளின் பண்பாடுகளுக்கிடையில் வரலாற்றுரீதியான ஒப்புமைகளை மானிடவியல் தளத்தில் நின்று மிக நுட்பமாக ஆராய்ந்துள்ளது. இத்தகு ஒப்புமைசார்ந்த ஆய்வுகளைக்கொண்ட இந்நூல் இவ்விரு நாடுகளைச் சேர்ந்த தமிழர் பண்பாட்டின் சிறப்பியல்புகளை அறிய உதவுகின்றது. சமயம்-சமூகம் ஆகிய இரு பிரிவுகளில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலில் சமயம் என்ற பகுதியில் கதிர்காம முருகன்: ஒரு சமூக-மானிடவியல் தரிசனம், சமூக-பண்பாட்டு மாற்றங்களிடையே கண்ணகியின் அடையாளம், யாழ்ப்பாணத்தில் அண்ணமார் வழிபாடு, அறிவும் உணர்வும் அரசியலும்: பௌத்தம் துரோகம் செய்தது? நூல் தடை விவகாரம்- ஒரு மீளாய்வு, பாகம்பிரியாள், கடவுளரெல்லாம் கடற்கரையில் ஆகிய 6 கட்டுரைகளும், சமூகம் என்ற பகுதியில் சமூக-மானிடவியல் புலமாகக் கட்டிடக்கலை, இந்தியக் கிராமங்களின் சமூகவெளி, நாட்டார் வாழ்வில் நாடோடிகள் மருத்துவம், சமகாலத் தமிழ்ச் சமூகம் ஆகிய 4 கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. சமூகவியலாளர் என்.சண்முகலிங்கன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராவார். மானுடவியலாளரான சீ. பக்தவத்சல பாரதி, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குநராவார். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 596847).