மலர் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம், புங்குடுதீவு, 1வது பதிப்பு, மார்ச் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).
236 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×20 சமீ.
3.3.1910இல் அமரர் வ.பசுபதிப்பிள்ளை அவர்களால் தாபிக்கப்பட்டு, 3.3.2010 அன்று தனது நூற்றாண்டு விழாவைக்காணும் புங்குடுதீவு கணேச மகா வித்தியாலயத்தின் நினைவு மலர். 210 மாணவர்களையும் (இருபாலாரும்) 16 ஆசிரியர்களையும் கொண்டியங்கும் இப்பாடசாலையின் தற்போதைய அதிபராக எஸ்.கே.சண்முகலிங்கம் பணியாற்றுகின்றார். வாழ்த்துரைகள், நினைவுச் சுவடுகள், கவிதைக்களம், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகிய ஐந்து பெரும்பிரிவுகளில் அடங்கும் இம்மலரில் நினைவுச்சுவடுகள்- பாடசாலையின் வரலாற்றைப் பல்வேறு ஆவணக்கட்டுரைகளின் வாயிலாகவும் பழைய மாணவர்களின் அனுபவக்கட்டுரைகளின் வாயிலாகவும், புகைப்படத் தொகுப்பின் வழியாகவும் வழங்குகின்றது. கவிதைக்களம் 11 கவிதைகளையும், சிறுகதைக்களம்- நாவேந்தன் (சுடலை ஆண்டி), நாகேசு தர்மலிங்கம் (குங்குமப் பொட்டு) ஆகியோரின் கதைகளையும் அடக்குகின்றது. கட்டுரைகள் என்ற பிரிவில் புங்குடுதீவுக் கல்விப்பாரம்பரியம் அன்றும் இன்றும் (கா.குகபாலன்), புங்குடுதீவிலே நிலவிவரும் சமய பண்பாட்டு மரபுகள்- ஒரு நோக்கு (வி.சிவசாமி), மனித விழுமியக் கல்வியும் அதன் தேவையும் (குமாரசாமி சோமசுந்தரம்), புதுயுகமும் அதை நோக்கிய மாற்றங்களும் (மு.தளையசிங்கம்), பல்கலைக்கழக ஆய்வு நெறிமுறைகள் (கனகசபாபதி நாகேஸ்வரன்), இலக்கியமும் மொழித்திறன் வளர்ச்சியும் (த.துரைசிங்கம்), கல்வி உளவியல் ஆசிரியர் தொழிலுக்கு முன்னர் வழங்கப்படவேண்டியதன் அவசியம் (தர்மலிங்கம் ஸ்ரீகரன்), படைப்பாற்றல் பற்றிய சில கருத்தோட்டங்கள் (சோ.சந்திரசேகரம்), சிறுவர் இலக்கிய வளர்ச்சி: ஒரு நோக்கு (புலவர் பூங்குன்றன்), மனித உரிமைகள் கல்வி: வழிகாட்டியா அல்லது வாழ்க்கையா (வி.ரி.தமிழ்மாறன்), செல்வம் என்பது சிந்தையின் நிறைவே (இ.க.சிவஞானசுந்தரம்), கற்றலை அற்புதமாக்குதல் (மு.பொன்னம்பலம்), யான் கண்ட புங்குடுதீவு (குல சபாநாதன்), பூகோளமயமாக்கல் சூழலில் அறிவுருவாக்கம் (வி.எஸ்.இந்திரகுமார்), யாழ்ப்பாணத்தின் குடும்ப அமைப்பு ரீதியான மாற்றம் (ந.சசிகுமார்), சாதி-தமிழினச் சாபக்கேடு: ஒரு திறந்த மடல் (சிவஞானசுந்தரம் பகிராஜ்), தீவகம் ஒரு வரலாற்று நோக்கு (வி.சிவசாமி) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்று மலரைச்சிறப்பிக்கின்றன.