R.S.நடராசா. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.7, 57ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுலை 2011. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 202, ஆட்டுப்பட்டித் தெரு).
xvi, 206 பக்கம், தகடுகள், விலை: ரூபா 375.00, அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-85641-7-2.
பலாலி ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபரான ஆர்.எஸ்.நடராசா அமரர் சேர்.பொன்.இராமநாதன் கல்வி தொடர்பாகக் கொண்டிருந்த கருத்தியலையும் கல்விப் பணிகளையும் இவ்வாய்வில் பதிவுசெய்துள்ளார். அறிமுகம் முதல் மதிப்பீடு வரையிலான 12 இயல்களில் எழுதப்பட்டுள்ள இந்நூல் மூன்று தசாப்தங்களுக்கு முன் தனது கல்வியியல் முதுகலைமாணிப் பட்டத்திற்காக மேற்கொண்டிருந்த ஆய்வாகும். அறிமுகம், கல்வி மரபு, வழிகாட்டிகள், பின்னணி, கல்வி இலக்கு, கல்வி வழங்குவது அரசின் பொறுப்பு, கல்வியும் மொழியும், கல்வி விருத்தி, ஆசிரியப்பணி, கல்லூரிகள் நிறுவுதல், சைவ வித்தியாவிருத்திச் சங்கமும் இராமநாதனும், மதிப்பீடு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட இவ்வாய்வில் ஏராளமான தகவல்கள் காணப்படுகின்றன. அவரது வாழ்வில் செல்வாக்குச் செலுத்தியவர்களான ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, மாமனார் சேர். முத்துக்குமாரசுவாமி, சேர் .ரிச்சர்ட் மோர்கன், அவரது ஞானகுருவான அருட்பரானந்தர் ஆகியோர் பற்றிய விபரங்களும் இவரது ஆய்வில் இடம்பெற்றுள்ளன. இராமநாதன் பற்றிப் போற்றிப்பாடும் ஆய்வாகவன்றி அவரை விமர்சனம்செய்தும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டிருப்பது இந்நூலைப் பிறிதொரு முக்கியமான தளத்துக்கு இட்டுச்செல்கின்றது. அமெரிக்க சொற்பொழிவுகளில் கல்வி தொழில் விருத்தியிலும் ஆன்மீக விருத்தியிலும் சமநிலை பேணவேண்டும் என்று வலியுறுத்திய இவரால் தனது சொந்தப் பாடசாலைகளில் அத்தகைய சமநிலையைப் பேணமுடியவில்லை என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். சாதிய ஒழிப்பு பற்றிய கருத்துக்கள் இவரிடமிருந்து பிற்காலத்திலேயே வந்ததாகக்கூறும் ஆசிரியர் தனது பாடசாலைகளில் தாழ்த்தப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு இடமிருக்கவில்லை என்கிறார்.