க.சு.நவநீதகிருஷ்ண பாரதியார். யாழ்ப்பாணம்: கு. பூரணானந்தா, மாவிட்டபுரம், 1வது பதிப்பு, தை 1953. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).
81 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தின் சிவபுராணம் பகுதிக்கு மாவைக் கவுணியன் என்று போற்றப்பட்ட பண்டிதமணி க.சு.நவநீதகிருஷ்ண பாரதியார் (1889-1954) எழுதிய பேருரை இதுவாகும். அவரது மருமகனாரின் முயற்சியால் நூல்வடிவமாகியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ண பாரதி தமிழ்நாட்டில் பிறந்தவர். கிருஷ்ணாபுரம், கரவட்டங்குடியில் சுப்பிரமணிய பாரதி என்பவருக்கு மகனாக இவர் பிறந்தார். இளம் வயதில் இலக்கணம், இலக்கியம், தருக்கம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தபின், திருவாவடுதுறை ஆதீனத்தில் திருமுறை ஆய்வில் ஈடுபட்டார். சேர் பொன்னம்பலம் இராமநாதனின் வேண்டுகோளுக்கிணங்க, 1917 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் தமிழ்ப் பேராசானாகப் பணியாற்ற இலங்கை வந்தார். அதன் பின்னர் யாழ்ப்பாணவாசியாகி, ஈழத்து அறிஞராகவே இனங்காணப்பட்டார். இவரே உலகியல் விளக்கம் என்னும் தனிச் செய்யுள் நூலின் ஆசிரியராவார். அந்த நூலின் பதிப்பாசிரியராக விபுலானந்த அடிகள் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. திருவாசகம், நன்னூல், திருமந்திரம் போன்ற நூல்களுக்கு உரை எழுதி இலங்கையில் மட்டுமன்றி இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பாராட்டுப் பெற்றவர் இவர். தேசநேசன் இதழில் ஆசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி பெயர் சவுந்தரநாயகி. சமூகசேவகியான காலஞ்சென்ற பத்மாவதி பூர்ணானந்தா இவர்களது மகளாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2971).