ச.சுப்பிரமணியம். புத்தூர்: பண்டிதர் ச.சுப்பிரமணியம், சிவன் வீதி, ஆவரங்கால், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 2: அரசன் அச்சகம், 30, ஹைட் பார்க் கோர்னர்).
xxxvi, (2), 268 பக்கம், புகைப்படங்கள், ஓவியங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25 x 19 சமீ.
கவி காளிதாசனின் கைவண்ணத்தில் உருவான சிவ-பார்வதி காதல் வைபவம்தான் குமாரசம்பவம் என்ற காவியமாகும். இந்திய தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர், கவி காளிதாசனின் குமாரசம்பவத்தை ‘எல்லையில்லாத திரையில் வரைந்த ஓவியம் இது. காதலின் நிரந்தரத் தன்மையை வர்ணிக்கிறது. காதல் கொண்ட இதயத்தின் தூண்டுதல்களையும் வேண்டுகோளையும் தியாகத்தையும் இது விளக்குகிறது. காவியத்தின் முடிவில் காதல் ஜெயிக்கிறது’ என்று குறிப்பிடு கிறார். குமாரசம்பவத்தின் முதல் சருக்கம் இமயமலையில் வருணனையையும், பார்வதியின் அழகையும் பேசுகிறது. இரண்டாவது சருக்கத்தில் தேவர்கள் தாரகனின் கொடுமைகள் பற்றி பிரம்மாவிடம் முறையிடுகிறார்கள். அதற்கு சிவபார்வதிக்கு மகனாகத் தோன்றுபவனால் (சிவனின் சக்தியாக) தாரகன் கொல்லப்படுவான் என்று கூறுகிறார். மூன்றாவது சருக்கத்தில், மன்மதன் காட்டுக்கு வந்ததால் அங்கே காமம் அதிகரிக்கிறது. இங்கு சிவனின் தவத்தின் மேன்மையும், மன்மதனின் தோல்வியும் கூறப்படுகிறது. நான்காவது சருக்கத்தில் மன்மதனை இழந்த ரதியின் புலம்பலும், வசந்தனின் ஆறுதலும், சிவனின் திருமணத்தின் போது கிடைக்கப்போகும் சாபவிமோசனமும் பேசப்படுகிறது. ஐந்தாவது சருக்கத்தில், பார்வதியின் தவவலிமை பற்றியும், சிவனே ஒரு பிரம்மச் சாரியாக வந்து பார்வதியிடம் உரையாடுவதையும், முடிவில் பார்வதியின் தவத்திற் கான வெற்றி பற்றியும் பேசப்படுகிறது. ஏழாவது சருக்கத்தில், ஏழு ரிஷிகள் அருந்ததிதேவியுடன் சிவனின் ஆணைப்படி இமவானிடம் சென்று பெண் கேட்பதும், இமவானின் சம்மதமும் காணலாம். திருமண வைபவத்தோடு ஏழா வது சருக்கம் முடிவடைகிறது. 1948இல் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியில் இணைந்த பண்டிதர் ச.சுப்பிரமணியம் தமிழ்ப் போதகாசிரியராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17161).