க.சண்முகலிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
65 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978- 955-659-579-6.
2007ஆம் ஆண்டு ‘விழுது’ ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தின் ‘கூடம்’ இதழில் வெளிவந்த ‘நான்காவது உலகம்’ (பெர்னாட் நைட்ஸ்மான்) என்ற கட்டுரையையும், ‘சமஷ்டி அரசியல் முறையும் பண்பாட்டுப் பன்மைத்துவமும்’ (டி.கே.ஊம்மன்) என்ற கட்டுரையையும், றொனால்ட் எல். வார்ட்ஸ் என்பவர் எழுதிய கட்டுரை யொன்றைத் தழுவி ஆசிரியரால் எழுதப்பட்ட ‘பன்மைத்துவத்தை முகாமை செய்தலும் அதற்கான சமஷ்டி மாதிரிகளும்’ என்ற கட்டுரையுமாக மொத்தம் மூன்று கட்டுரைகளின் தமிழாக்கம் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. உலகில் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் பற்றியும், தேசிய அரசுகள் (Nation States) எனப்படும் சிறைக்கூடங்களில் வதைக்கு உள்ளாகும் தேசிய இனங்களின் துன்பத்தையும் துயரத்தையும் எடுத்துக்கூறும் கோட்பாடே நான்காவது உலகம் என்பதை பெர்னாட் நைட்ஸ்மானின் கட்டுரை விளக்குகின்றது. 1990களில் 191 தேசிய அரசுகளின் எல்லைகளுக்குள் 5000 வரையிலான தேசிய இனங்கள், பழங்குடி மக்கள், சிறுபான்மை மக்கள் குழுமங்கள் என்பன இருந்துள்ளன. இந்நிலையில்இவற்றின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ன? உலகஅரங்கினிலே ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த தீர்வு சமஷ்டி அரசியல் முறையும் அதனோடு இணைந்ததான பன்மைப் பண்பாட்டுவாதமும் ஆகும். இது பற்றி டி.கே. ஊம்மனின் கட்டுரை விளக்குகின்றது. க.சண்முகலிங்கம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டம் பெற்றவர். இலங்கை நிர்வாக சேவையில் 1971-2004 காலப்பகுதியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வடக்குகிழக்கு மாகாணத்தின் கூட்டுறவு ஆணையாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராகவும் விளங்கியவர். தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்.