பவணந்தி முனிவர் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சதாசிவப்பிள்ளை, நல்லூர், 1வது பதிப்பு, சித்திரை 1880. (சென்னபட்டணம்: வித்தியானுபாலன யந்திரசாலை).
(6), 400 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 19×11.5 சமீ.
இலக்கண வரம்புகளை வழுவாமல் காத்தால்தான், தமிழ் மொழி, என்றும் எழிலிற் குன்றாது சிறப்பாக விளங்கும். தமிழ் இலக்கண நூல்களுள் தொன்மையானது தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியத்துக்குப் பின்னர் எழுந்தவற்றுள் அனைவரும் விருப்புடன் கற்று வந்தது பவணந்தி முனிவரின் நன்னூலாகும். பவணந்தி முனிவர் சமணச் சான்றோர் இன்றைய கர்நாடக மாநிலத்திலுள்ள சனநாதபுரம் என்னும் சனகை என்னும் ஊரிற் பிறந்தவர். சீய கங்கன் என்னும் அப்பகுதி அரசனால் ஆதரிக்கப் பெற்றவர். எழுத்தும் சொல்லும் பொருளும் யாப்பும் அணியும் என்னும் ஐந்து இலக்கணங்களுள், முதல் இரண்டுமான எழுத்தையும் சொல்லையும் குறித்த இலக்கணங்களை மட்டுமே இந் நன்னூல் கூறுகின்றது. இதன் உரைகளுள் மயிலைநாதர் உரை பழைமையானது. இதனையடுத்துத் திருநெல்வேலியிலுள்ள சேற்றூர்ச் சமஸ்தானப் பெரும்புலவரான சங்கர நமச்சிவாயரின் விருத்தியுரை வெளிவந்து, பலரின் பாராட்டு தலுக்கும் உரியதாயிற்று. இதனை அப்படியே வைத்துக் கொண்டு, தாம் கருதிய சில திருத்தங்களையும் மாற்றங்களையும் சேர்த்து மாதவச் சிவஞான முனிவர் அவர்கள் தம் விருத்தியுரையினை வெளியிட்டனர். இதனை மேலும் சிறிது திருத்தியும், புதிய விளக்கங்களைச் சேர்த்தும் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் அவர்கள் (1822-1879) தம்முடைய நன்னூற் காண்டிகை உரைப்பதிப்பை வெளியிட்டனர். நாவலர் பதிப்புத் தமிழ் அறிஞரால் விரும்பி வரவேற்கப்பெற்ற சிறந்த பதிப்பாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19292).