என்.செல்வராஜா (ஆசிரியர்). ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxviii, 798 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 7500., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-393-8.
இலங்கையில் தமிழில் நூலகவியல்துறை சார்ந்த சஞ்சிகைகளின் முன்னோடியாக அமைந்த நூலகவியல் ஒரு காலாண்டுச் சஞ்சிகையாக செப்டெம்பர் 1985இலிருந்து வெளிவர ஆரம்பித்தது. நூலகவியல் துறைசார் ஆக்கங்கள் தமிழ்மொழியில் இல்லாத குறையை நிவர்த்திசெய்யும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சஞ்சிகை கல்லச்சுப் பிரதியாக 500 பிரதிகள் வரையில் அச்சிடப்பட்டு இலங்கையின் பிரதான நூலகங்களுக்கும் நூலகவியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. 1991இல் இவ்விதழின் ஆசிரியரான என்.செல்வராஜா புலம்பெயர்ந்து லண்டனில் குடியேறும் வரையில் தடையின்றி இயங்கிய நூலகவியல் சஞ்சிகையின் வெளியீட்டின் பின்னணியில் அயோத்தி நூலக சேவை அமைப்பு உதவியாக இருந்தது. அவர் லண்டன் வந்த பின்னரும் இலங்கையிலிருந்து பல நூலகவியல் மாணவர்களின் வேண்டுகோளின்பேரில் ஜனவரி 2006, ஏப்ரல் 2006, ஏப்ரல் 2007 ஆகிய காலங்களில் ஏழாவது தொகுதியின் மூன்று இதழ்கள் அச்சுருவில் வெளியாகி இலங்கையில் விநியோகிக்கப்பட்டன. இப்பெருந்தொகுப்பு நூலகவியல் சஞ்சிகையின் முழுமையான ஏழு தொகுதிகளினதும் கட்டுரைகளை நுழைவாயில், நூலக வரலாறு, நூலகக்கல்வி, நூற்பகுப்பாக்கம், பட்டியலாக்கம், நூலகமும் கணினியும், நூலகமும் சமூகமும், நூலகமும் இளையோரும், நூலகமும் கல்வியும், நூலக முகாமைத்துவம், நூலகக் கூட்டுறவு, நூலீட்டலும் நூற்பாதுகாப்பும், தேசிய நூலகமும் ஆவணக் காப்பகமும், நமது நூலகங்கள், நமது நூலகர்கள், எழுத்தும் அச்சுக்கலையும், நூலியல்-நூல்கள்-பதிப்புத்துறை, நூல்விபரப்பட்டியலும் சுட்டிகளும், கருத்தரங்குகளும் ஒன்றுகூடல்களும், செய்திகள் ஆகிய 20 பிரிவுகளில் பாடவாரியாகப் பகுத்துத் தொகுத்து ஆவணப்படுத்துகின்றது.