தோழர் பாலன். லண்டன்: தோழர் பதிப்பகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(7), 163 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 13.5 சமீ.
இந்நூலாசிரியர் தோழர் பாலன் இலங்கையில் கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது லண்டனில் வாழ்ந்து வருகின்றார். இவர் தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை என்னும் புரட்சிகர இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர். அதன் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவராகவும் இயங்கியவர். தோழர் பாலன் ‘பேரவை’ அமைப்பு சார்பாக தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துவந்த தோழர் தமிழரசனுடன் ஐக்கியத்தை மேற்கொண்டவர். அவர் தோழர் தமிழரசனுடனான தனது அனுபவங்களை இந்நூலில் விவரித்துள்ளார். தோழர் பாலன் 12.3.1991 அன்று சென்னையில் கியூ பிரிவு உளவுப்பொலிசாரால் கைது செய்யப்பட்டார். எட்டு வருட சிறை மற்றும் சிறப்பு முகாம் சித்திரவதையை அனுபவித்த பின்னர் 03.04.1998 அன்று விடுதலை செய்யப்பட்டதுடன் இந்தியாவிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். இந்நூலில் தோழர் தமிழரசன்- ஒரு சுருக்க அறிமுகம், தோழர் தமிழரசன் பயங்கரவாதியா? தோழர் தமிழரசனும் அவர் பின்பற்றிய தத்துவங்களும், தோழர் தமிழரசனும் சாதியத்துக்கு எதிரான போராட்டமும், தோழர் தமிழரசனும் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பும், தோழர் தமிழரசனை வஞ்சனையால் கொன்ற இந்திய அரசு, தோழர் தமிழரசன்பற்றி புலவர் கலியபெருமாள், தோழர் தமிழரசன் பாதையில் பயணித்த தோழர் சுந்தரம், தோழர் தமிழரசன் பறறி உரையாடல் மற்றும் குறிப்புகள் ஆகிய பத்துத் தலைப்பு களின்கீழ் தோழர் தமிழரசனுடனான தனது அனுபவங்களை ஆசிரியர் பகிர்ந்து கொண்டுள்ளார்.