ம.க.வேற்பிள்ளை (மூலம்), ந.சபாபதிப்பிள்ளை (உரையாசிரியர்), சி.சிவலிங்கராஜா (பதிப்பாசிரியர்). சாவகச்சேரி: மட்டுவில் சாந்தநாயகி சமேத சிவச்சந்திரமௌலீசர் தேவஸ்தானம், 1வது பதிப்பு, மார்ச் 2022. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xxii, 183 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-624-5901-14-2.
ஆசிரியர் ம.க.வே.பிள்ளைப் புலவர் இயற்றிய சந்திரமௌலீசர் சதகம் என்னும் ஈழமண்டல சதகமும், மேற்படி ஆசிரியரின் மகனார் மகாலிங்கசிவம் முன்னிலையில் யாழ்ப்பாணம் உரும்பிராய் ந.சபாபதிப்பிள்ளை இயற்றிய உரையும் சென்னபட்டணம் வித்தியாநுபாலன யந்திரசாலையில் ருத்ரோற்காரி வருஷம் (1923) ஆவணி மாதம் முதலில் வெளியிடப்பட்டிருந்தது. நூற்றாண்டுப் பழமையான இந்நூல் அதன் மீள்பதிப்பாகும். ஆறுமுகநாவலர் மரபில் வந்த ஈழத்துத் தமிழ்ப் புலமையாளர்களில் ஆசிரியர் ம.க.வே.பிள்ளைப் புலவரும் ஒருவர். மரபுவழி இலக்கண இலக்கியங்களில் துறைதேர்ந்த இவரது உரைகளின் சிறப்பினால் வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை இவருக்கு ‘உரையாசிரியர்” எனும் பட்டத்தைச் சூட்டியிருந்தார். திருவாதவூரடிகள் புராணம், புலியூரந்தாதி, அபிராமியந்தாதி, கெவுளிநூல் என்பவற்றுக்கு இவர் எழுதிய உரைகள் பிரசித்தமானவை. இவை தவிர ஈழமண்டல சதகம், ஆருயிர்க் கண்மணி மாலை, புலோலி வைரவக் கடவுள் தோத்திரம் என்பன இவரது ஆக்க இலக்கியங்கள். வேதாரணிய புராணம் சிவகாமியம்மை சதகம் என்பனவற்றை பரிசோதித்துப் பதிப்பித்துள்ளார். ஈழத்தின் மரபுவழிப் புலமையின் முக்கிய அடையாளங்களில் இவருமொருவராவர்.