பாடநூல் தயாரிப்புக் குழு. கிளிநொச்சி: சமூகக் கல்வி மன்றம்-வன்னி, 1வது பதிப்பு, 2000. (கிளிநொச்சி: கன்னி நிலம் பதிப்பகம், 101, முருகேச கோவில் முன்வீதி, ஸ்கந்தபுரம்).
(4), 34 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
சிறிலங்கா அரசின் பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வரும் வரலாற்றுப்பாட நூல்கள் சிங்கள இனத்தை மேன்மைப்படுத்தக்கூடிய வகையில் மிகைப்படுத்தியும், தமிழ் மக்கள் பெருமைகளை மறைத்தும் தமிழ்மக்களை இழிவுபடுத்தும் வகையிலே திரித்தும் எழுதப்பட்டுள்ளன. பொய்யான வரலாறு தமிழ்மாணவர்களுக்குப் புகட்டப்படுகிறது. இத்தகைய கல்வியினால் தமிழ் மாணவர்கள் தன்னம்பிக்கையோ நாட்டுப்பற்றோ அற்றவர்களாக வாழும் நிலை இருந்து வருகின்றது. இனத்துக்கு வழிகாட்டும் வரலாற்றுக் கல்விக்கு இந்த நிலை என்றால் சமூக வாழ்க்கையை நெறிப்படுத்தும் நோக்கோடு சிறீ லங்கா அரசால் கற்பிக்கப்படும் சமூகக் கல்வியினூடாக தமிழ் மாணவர்கள் தமது நாட்டின் நீர் வள நில வளங்களையோ சமூக அறிவையோ வாழ்க்கையை நெறிப்படுத்தக்கூடிய அறிவையோ பெற முடியவில்லை. தமிழினத்தை சிங்களவர்களுக்கு அடங்கி அடிமையாக வாழவைப்பதற்கேற்ற வகையிலேயே சமூகக் கல்விப் பாடத்திட்டத்தின் பாடப்பரப்புகள் திட்டமிடப்பட்டு ஆக்கப்பட்டுள்ளன. எனவே தான் இன்றைய வரலாறு சமூகக் கல்வி பாடங்களில் தமிழ மாணவர்களுக்கு நாட்டமோ ஆர்வமோ ஏற்படவில்லை. தேர்வுகளில் புள்ளிகளைப் பெறுவதற்கென்ற ஒரே நோக்கிலேயே இப்பாடங்களைத் தமிழ் மாணவர்கள் படிக்கின்றார்கள். தமிழ் மாணவர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டக்கூடியதாகவும் சமூக வாழ்வை நெறிப்படுத்தக் கூடியதாகவும் பொதுத் தேர்வுகளுக்கு ஊறு நேராத வகையிலும் 6, 7, 8 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ‘சமூகக் கல்வியும் வரலாறும்” என்ற பாடநூலினூடாகச் சில பாட அலகுகளைச் சமூகக் கல்வி மன்றம் ஆக்கித் தந்திருக்கிறது. நான்கு இயல்களைக் கொண்ட இந்நூலில் ஆண்டு 8இற் கல்வி கற்கும் மாணவர்களுக்கென நான்கு இயல்களை இந்நூல் கொண்டுள்ளது. இயல் 1இல் ஈழத் தமிழர் தாயகம், இயல் 2இல் மகாவம்சம் வரலாற்று நூலல்ல, இயல் 3இல் போர்த்துக்கேயர் இலங்கையில் வேரூன்றிய வரலாறு, இயல் 4இல் வீரம் செறிந்த வன்னியும் தமிழரசுகளும் ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.