தமிழ் மொழி அலுவல்கள் திணைக்களம். கொழும்பு 4: தமிழ்மொழி அலுவல்கள் திணைக்களம், பிரதேச அபிவிருத்தி அமைச்சு, 244, காலி வீதி, 1வது பதிப்பு,மே 1981. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).
36 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 13 சமீ.
இலங்கை அரசாங்கத்தால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாருக்கு 22.5.1981 அன்று நினைவு முத்திரை வெளியிடப்பட்டபோது வெளியிடப்பட்ட சிறப்பிதழ். சுவாமி ஞானப்பிரகாசருக்கு மதிப்பளிக்கும் முகமாக இலங்கை அரசு அவரது படத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை ஒன்றையும், சிறப்பு முதல் நாள் உறை ஒன்றையும் 1981 மே 22 இல் வெளியிட்டது. வழமையாக நினைவு முத்திரைகள் தலைநகர் கொழும்பிலேயே வெளியிடப்படும். ஆனால் இந்த முத்திரை ஞானப்பிரகாசரின் ஊரான யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்பாக நிறுவப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் யாழ் ஆயர் அதி வணக்கத்துக்குரிய எஸ். தியோகுப்பிள்ளை ஆண்டகை முன்னிலையில் யாழ்ப்பாணம் பிரதம அஞ்சல் அதிபர் தி. தியாகராசாவிடமிருந்து நினைவு முத்திரையுடன் கூடிய முதல் நாள் தபால் உறையை மாவட்ட அமைச்சர் யு. பி. விஜயக்கோன் பெற்றுக் கொண்டார். பன்மொழிப் புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (ஆகஸ்ட் 30, 1875 – ஜனவரி 22, 1947) தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர்களுள் ஒருவர். இலத்தின், கிரேக்கம் முதலாய பதினெண் மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2747).