மாவடியார் சூ. சிவதாஸ் (மலராசிரியர்), எஸ்.சங்கர் (ஓவியர்). நெடுங்கேணி: நெடுங்கேணி பண்ணையாளர் சங்கம், இணைவெளியீடு, வவுனியா: இயற்கை வழி இயக்கம், 1வது பதிப்பு, 2022. (வவுனியா: பொய்கை பதிப்பகம், கந்தசாமி கோயில் வீதி).
95 பக்கம், கருத்தோவியங்கள், விலை: ரூபா 100., அளவு: 26.5×18 சமீ.
வரையறுக்கப்பட்ட வவுனியா வடக்கு ஒருங்கிணைந்த மாதிரிப் பண்ணையாளர்கள் சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கத்தினரின் பதிப்புரிமையுடன் வெளிவந்துள்ள இச்சிறப்பிதழில் விவசாய நூல்களிலும் தமிழ் இலக்கியங்களிலும் கண்ட காட்சிகளிலும் இருந்து எடுத்த விவசாய மேம்பாட்டிற்கான இரத்தினச் செய்திகளை கருத்தோவியக் கலைஞர் எஸ்.சங்கர் அவர்களின் கைவண்ணத்தில் செதுக்கிய அழகான காட்சிகளாக இந்நூலின் பக்கங்கள் தோறும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” முதலாக ‘இலமென்று அசையீ இருப்பாரை” ஈறாக 91 தலைப்புகளில் இக்கருத்தோவியங்கள் பக்கம் தோறும் விவசாயச் சமூகச் செய்திகளை அள்ளி வழங்குகின்றது. இடையே இயந்திரமயமாதல், சிறந்த விவசாய நடைமுறை, விதைமுளை திறன், பாரம்பரிய பயிர்க்காப்பு, நாற்றுமேடை தொற்று நீக்கம், தீமை செய்யும் பூச்சிகள், வாழை நடுகை முறைகள், பண்ணைக் குட்டை, பாடசாலைத் தோட்டம், உள்ளீட்டு உற்பத்தியில் உயிர்வேலி, ஒருங்கிணைந்த பீடை முகாமைத்துவம் போன்ற விவசாயச் செய்திகளையும் கருத்தோவியங்களின் வழியாக எளிய முறையில் விவசாயிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.