கமலாம்பிகை லோகிதராஜா. அம்பாறை: திருமதி கமலாம்பிகை லோகிதராஜா, 352, பிரதான வீதி, பாண்டிருப்பு 2, 1வது பதிப்பு, மே 2012. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட் பிரின்டர்ஸ்).
(18), 19-271 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 500., அளவு: 20.5 x 15 சமீ., ISBN: 978-955-54358-0-2.
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவையின் ஸ்தாபக உறுப்பினரான அமரர் திருமதி கமலாம்பிகை லோகிதராஜா (12.05.1930-24.09.2015) அவர்கள் எழுதிய நூல். ஆங்கில பாட உதவிக் கல்விப் பணிப்பாளராக ஓய்வு நிலையடைந்த அமரர் கமலாம்பிகை லோகிதராஜா, கல்முனை பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கல்வி, விளையாட்டுத்துறை, கலை, இலக்கியத்துறை, சமூகப்பணி, என்பவற்றில் தன்னை அர்ப்பணம் செய்ததன் காரணமாக பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் நூல் விமர்சனம் செய்வதிலும் தனது பேச்சாற்றல் மூலமும் வெளிப்படுத்தி சிறந்து விளங்கினார். சமாதான நீதவானாக திகழ்ந்த இவர் சாமஸ்ரீ தேசகீர்த்தி போன்ற உயர் கௌரவங்களையும் பெற்றிருந்தவர். இவரால் எழுதப்பட்ட ‘பத்தும் பதியமும்’ எனும் இந்நூல் பலராலும் பேசப்படும் ஒரு நூலாகும். இதில் தென்கிழக்கில் புகழ்பூத்த தனது ஊரான பாண்டியூர் (பாண்டிருப்பு) பற்றிய பிரதேச வரலாற்றை ஆராய்கின்றார். பாண்டியர் குடியேற்றத்துடனும், பஞ்சபாண்டவர் சரித்திர வழிபாடுகளுடனும் அவ்வூரைத் தொடர்புபடுத்துகிறார். கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், தொல்லியல் தடயங்கள், கண்ணகை அம்மன் வழிபாட்டு முறைகள், அனுபவமும் புலமையும்கொண்ட முதியோரையும் நேர்கண்டு தன் ஆய்வுக்கான தகவல்களைப் பெற்றிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 51328).